செவ்வாய், 8 அக்டோபர், 2013

திருவாய்மொழியும் பகவத் கீதா பாஷ்யமும்

பகவத் விஷயம், ஸ்ரீவசநபூஷணம் மற்றும் குருபரம்பரை ப்ரபாவம் முதலிய நூல்களில் ஓர் நிகழ்வு காணப்படுகிறது. இந்த நிகழ்வை சற்று இங்கே விளக்கி எம்பெருமானார் எவ்வாறு திருவாய்மொழி பாசுரங்கள் கொண்டு கீதா பாஷ்யத்தை ஒருங்கவிட்டிருக்கிறார் என்று காட்ட முற்படுவோம்.
 
ஒருமுறை எம்பெருமானார் உபயவேதாந்த ப்ரவசனம் செய்துகொண்டிருந்தபோது அவர் கோஷ்டியில் எழுந்தருளியிருந்த ஒருவர் "இந்த ஆத்மாவுக்கு ஜ்ஞானமும், சேஷத்வமும் ஸ்வரூபம் என்று தேவரீர் சாதித்தீரே, இதற்கு நிரூபகம் (proof) எது?" என்று வினவினார். 

இதற்கு பதில் பிரஸ்தாவிக்க எம்பெருமானார் சர்வஜ்ஞராக (qualified) இருந்தபோதும் இவ்வர்த்தத்தை ஒரு ஆசார்யரை கொண்டு வெளியடவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி திருக்கோஷ்டியூர் நம்பியிடம் இவ்வர்த்தத்தை அறிந்துவரும்படி கூரத்தாழ்வானை நியமித்தார். ஆழ்வானும் ஆறுமாத காலம் நம்பி பக்கலில் காத்துகிடந்து *அடியேனுள்ளான் உடலுள்ளான்* என்கிற திருவாய்மொழி பாசுரத்திற்கு விளக்கத்தை பெற்று அதையே எம்பெருமானாரிடம் வந்து விஜ்ஞாபித்தார். ஆழ்வான் கற்றுவந்த பாசுரத்தின் உட்பொருளை எம்பெருமானார் அங்கே எழுந்தருளியிந்த கோஷ்டிக்கு விளக்கினார். இதனை சற்று ஈண்டு நோக்குவோம்.

"அடியேன்" என்கிற சொல் நாலாயிரத்தில் பலவிடங்களில் நமக்கு காணக்கிடைக்கின்றன. நம்மாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே திருவிருத்தத்தில் "அடியேன் செய்யும் விண்ணப்பமே" என்று தொடங்குகிறார். இப்படி அடியேன் என்ற சொல் பலவிடங்களில் இருக்க, திருவாய்மொழியில் ஒரு மூலையில் *அடியேனுள்ளான்* என்றவிடத்தை மட்டும் நம்பி ப்ரஸ்தாவித்ததற்கு காரணம் என்ன? இதனை சற்று மேலே பார்ப்போம்.

*அடியேன்* என்கிற சொல் பொதுவாக தேஹத்தை விசேஷணமாக (attribute) கொண்ட ஆத்மாவை குறிக்கும். இதற்கு உதாஹரணமாக மேலே சாதித்த *அடியேன் செய்யும் விண்ணப்பமே* என்கிற பாசுர தொடரை நோக்குவோம். ஜடப்பொருட்களால் உண்டான தேஹம் விண்ணப்பஞ்செய்ய முடியாததாகையாலே, இங்கே ஆத்மாவே விண்ணப்பம் செய்கிறதென்பது திண்ணம். இதேபோல், *அடியேன் சிறிய ஞானத்தன்* என்னுமிடத்திலும் 'ஞானத்தன்' சொல் மூலம் ஞானமுடைமை (possession of knowledge) சொல்லப்படுவதால் இச்சொல்லும் ஆத்மாவையே குறிக்கிறது என்பது திண்ணம்.

ஆனால், *அடியேனுள்ளான் உடலுள்ளான்* பாசுரத்தில் ஆத்மாவுக்கு விசேஷணமான தேஹவஸ்துவை *உடலுள்ளான்* எனும் சொற்றொடர் கொண்டு ஆழ்வார் அருளிச்செய்துள்ளபடியால் அவ்விடத்தில் *அடியேன்* என்கிற சொல் விசேஷணமின்றி ஆத்மாவை மட்டுமே குறிக்கும். இந்த பாசுரத்திற்கு அர்த்தம் கீழ்வருமாறு: *அடியேனுள்ளான்* என்னுமிடம் எம்பெருமான் இவ்வாத்மாவில் அனுப்ரவேசித்திருப்பதை சொல்கிறது. *உடலுள்ளான்* என்னுமிடம் எம்பெருமான் ஜடப்பொருட்களிலும் அனுப்ரவேசித்திருக்கிறான் என்று சொல்கிறது.

'அடியேனுள்ளான்' என்கிறவிடத்தில் 'என்னுள்ளான்' என்று ஆழ்வார் அருளிச்செய்திருந்தாலும் ஆத்ம அனுப்ரவேச பொருள் தேறிவிடும். அவ்வாறு செய்யாமல் *அடியேன்* என்று ஆழ்வார் அருளிச்செய்திருப்பது ஆத்மாவுக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று நன்கு விளக்கிக் காட்டுகிறது. மற்றை பாசுரங்களை காட்டிலும் இப்பாசுரத்தில் சேஷத்வம் விவக்ஷிதமாக  வெளிப்படுவதனால் (expressly meant) நம்பிகள் ஆழ்வானுக்கு இவ்வர்த்தத்தை அருளிச்செய்திருக்கிறார்.

சரி, இப்பேற்பட்ட உயர்ந்த திருவாய்மொழி அர்த்தத்தை நம் எம்பெருமானார் எங்கே பாஷ்யமிட்டு வெளியிட்டிருக்கிறார் என்று பார்ப்போம்:

சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதி நோர்ஜூந: |
அர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப!   || (பகவத் கீதை 7-16)

இந்த ஸ்லோகத்திற்கு பாஷ்யமிட்ட எம்பெருமானார் "பகவச் சேஷதைகரஸ ஆத்மா ஸ்வரூபவித் ஜ்ஞாநீ" என்று அருளிச்செய்துள்ளார்.  அதாவது, ஜீவாத்மாவின் ஜ்ஞானத்திற்கு ப்ரயோஜனம் தன் சேஷத்வத்தை அறிவது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளம் இந்த பாஷ்ய பங்க்தி மூலம் நமக்கு தெளிவாக புரிகிறது. நம்மாழ்வார் அருளிச்செயலில் அந்வயமில்லாமல் பாஷ்யகாரரால் இப்படி அருளிச்செய்திருக்க முடியாது என்பது காஞ்சி அண்ணங்கராசார்ய ஸ்வாமியின் திருவுள்ளம்.

Reference: திராமிடோபநிஷத் ப்ரபாவ சர்வஸ்வம்