செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எந்தத் திருக்காப்பு?


ஸ்ரீவைஷ்ணவர்கள் அணியும் திருமண் காப்பில் தான் எத்தனை வேற்றுமை! ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதயாத்தில் நாம் காணும் திருமண் திருக்காப்பு வேற்றுமைகள் அனைத்தும் பாஞ்சராத்திர ஆகம சாஸ்திரங்களையே அடிப்படையாக கொண்டவை. அப்படி இருந்தும் நம் சம்பிரதாயத்திற்கென்று ஒரு காப்பு, தங்கள் மதத்தாருக்கு ஒரு காப்பு, தங்கள் மதத்தாருக்குள்ளேயே மடத்துக்கு ஒரு காப்பு, முனித்ரயத்திற்கு ஒரு காப்பு. திருமலை திருவேங்கடவனுக்கு ஒரு காப்பென்றால் திருவரங்கனுக்கு வேறொரு காப்பு.
 
இவ்வாறு இருக்க, நம் பூர்வர்களான ஆழ்வார்கள் விரும்பி அணிந்த திருக்காப்பாவது யாது?

வண்பொன்னி பேராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய்
தொண்டர் சேவடி செழுஞ்சேறு
என் சென்னிக்கு அணிவனே

என்கிறார் குலசேகர பெருமாள் (பெருமாள் திருமொழி, 2-3).

எம்பெருமானின் அவதாரப் பெருமைகளை தினந்தோறும் வாயாரப் பாடி, மகிழ்ந்து, ஆநந்தக் கண்ணீரால் எம்பெருமானின் சந்நிதி திருமுற்றத்தை சேறாக்குகிற பாகவதர்களின் திருவடி பட்ட சேற்றை என் நெற்றிக்கு காப்பாக அணிவேன் என்கிறார் குலசேகராழ்வார்.

அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது நெற்றிக்கு தோஷம்தீர மங்களார்த்தமான திலகமாய் கொள்வேன் என்கிறார்.

இங்கே கண்ணநீர் என்பது எம்பெருமானின் நீர்மையை நினைத்து கண்கள் அசும்பொழுக வரும் ஆனந்தக் கண்ணீரைக் குறிக்கிறது. இந்த கண்ணநீருக்கு வெள்ளப்பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை உவமையாக கொள்கிறார் ஆழ்வார்.

இந்த பாசுரத்தின் தேறிய கருத்து யாதெனில், திருமண் காப்பைப் போன்ற புறச் சின்னங்களை காட்டிலும் பாகவத சேஷத்வத்தில் நிலைநிற்கும் நெஞ்சமே ஒரு ஸ்ரீவைஷ்ணவ அதிகாரிக்கு லக்ஷணம் என்கிறார் ஆழ்வார்.