புதன், 3 ஜூலை, 2013

திருநாராயணபுரம் ஈடு உத்ஸவ அனுபவங்கள் – 5 (நிறைவுப் பகுதி)

உத்ஸவம் முடிந்து ஊருக்கு கிளம்பும் நேரம் வந்துவிட்டது. மாமுநிகள் சந்நிதிக்கு தேவாள் ஏளனும்என்று அலைபேசியில் அர்ச்சகர் ஸ்ரீராமன் ஸ்வாமி அழைக்கிறார். அங்கே சென்றால் ஜீயருக்கு சாற்றப்பட்ட மாலை, ஜீயருக்கு சாற்றப்பட்ட விசேஷ சந்தனக் காப்பு, ஜீயர் திருமஞ்சனம் கண்டருளின ஏகாந்த தீர்த்தம் என்று ஒன்றின் பின் ஒன்றாக ஸ்வீகரிக்கச் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இது போதாதென்று கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் விரத பக்ஷணத்தைப்போல் லட்டு மற்றும் மைசூர் பாக் கொண்ட இரண்டு பைகளை நீட்டுகிறார். ஸ்வாமி! இவ்வளவு பக்ஷணம் அமுதுசெய்ய நம் க்ருஹத்தில் ஆட்கள் இல்லைஎன்று திருப்பி கொடுத்துவிட்டேன். விட்டால் வந்து உத்ஸவம் சேவித்ததற்கு சம்பாவனை கொடுத்திருப்பார் போலும்!

அர்ச்சகர் திரு. ஸ்ரீராமன் பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் இந்த நிறைவுப் பகுதியில் எழுத கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு முன்னர் அவருடைய திருத்தகப்பனாரும், சிற்றப்பாவும் மாமுநிகள் சந்நிதியை நிர்வஹித்துக் கொண்டிருந்தார்கள். மாமுநிகள் திருநக்ஷத்திர உத்சவத்திற்கு காஞ்சி/சென்னை வரை வந்து கைங்கர்யத்திற்கு பணம் வசூலித்துச் சென்ற காலம் அது. இன்று திரு. ஸ்ரீராமன் நிர்வாஹத்தில் கைங்கர்யபரர்களுக்கு எந்தவித்த குறையுமின்றி உத்ஸவங்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தும் ஸ்ரீராமன் ஸ்வாமியின் ஒரே குறை: ஸ்ரீவைஷ்ணவ சேவார்த்திகள் போதுமான அளவில் மாமுநிகளை தரிசிக்க வருவதில்லை என்று. மற்றை திவ்ய தேசங்களில் மாமுநிகளை சேவிப்பது அரிது. எப்பொழுது சந்நிதி திறப்பார்கள், சேவை செய்து வைப்பார்களா என்பதைப் பற்றி சரியாகச் சொல்லவே முடியாது. ஆனால் திருநாராயணபுரத்தில் பெரிய கோவில் திறந்திருக்கும் வரை மாமுநிகள் சந்நிதியும் திறந்து வைக்கப்படுகிறது. ஊருக்கு செல்வதற்கு முன் திரு. ஸ்ரீராமனுக்கு ஒரு போன் செய்தாலே போதும். எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.

இந்த இடுகையை படிக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியேனின் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நாம் எவ்வளவோ திவ்ய தேசங்கள் சென்று பெருமாளை, ஆசார்யனை சேவிக்கிறோம். சிலவிடங்களில் அர்ச்சகர் ஸ்வாமிகள் சரியாக சேவை செய்து வைக்கவில்லை என்ற குறையுடன் திரும்புகிறோம். நீங்கள் ஒரு திருமூல நக்ஷத்திரதிற்காவது திருநாரயணபுரம் அவசியம் எழுந்தருளவேண்டும். ஒவ்வொரு திருமூலத்திற்கும் செல்வப்பிள்ளை மாமுநிகள் சந்நிதிக்கு எழுந்தருள்கிறார். கோஷ்டி, பிரசாதம் என்று ஒவ்வொரு திருமூலமும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நீங்களும் சென்று வந்து உங்கள் திருநாராயணபுரம் யாத்திரை அனுபவங்களை பதிவு செய்யுங்களேன்!