செவ்வாய், 2 ஜூலை, 2013

திருநாராயணபுரம் ஈடு உத்ஸவ அனுபவங்கள் – பகுதி 4

உபதேச ரத்தினமாலை கோஷ்டி மாமுநிகள் சந்நிதி வாயிலில் நிறைவு பெறுகிறது. எம்பெருமானார் முன்செல்ல செல்வப்பிள்ளை உபய நாச்சியார்களுடன் மாமுநிகள் சன்னதிக்கு எழுந்தருள்கிறார். பாஞ்சராத்ர ஈஸ்வர சம்ஹிதை ஆகம விதிப்படி எம்பெருமானை ஆஸ்தானத்தில் எழுந்தருளப் பண்ணுவதும் வேத மந்த்ரங்கள் ஜபிப்பதுவுமாக நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

சன்னதி உள்ளிலிருந்து வாசல் தாண்டி சாலை வரை பாகவதர்களின் திரள். “கோவிந்தா..கோவிந்தா” என்று கோஷமிட்டபடி செல்வப்பிள்ளையை காண வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சந்நதியின் நடுவில் செல்வப்பிள்ளை உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளியிருக்கிறார். அவருடைய இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எம்பெருமானாரும்-பெரிய ஜீயரும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

அன்றைய கோஷ்டிக்கு முதல் மூன்று நாள் காணாத அளவிற்கு அலைகடலென ஸ்ரீவைஷ்ணவர்களின் வருகை இருந்தது. திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை தொடங்குகிறது. ‘சூழ்விசும் பனிமுகில்’ மற்றும் ‘முநியே நான்முகனே’ பதிகங்களின் சாற்று பாசுரங்களை விட்டுவிட்டு ‘இராமானுச நூற்றந்தாதி’ சேவாகாலமும் நடைபெருகிறது. கோஷ்டியில் பங்கேற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களை மறந்து எந்தை இராமானுசனுக்கு மங்களாஸாஸனம் செய்த காட்சியை என்னவென்று சொல்ல! நாத்தழும்பெழ ‘இராமானுசா’ என்றழைத்த ஈட்டம் கண்டிட காணும் கண் பயன் உற்றது.

சாற்று பாசுரங்களுக்கு நம்பிள்ளையின் ஈடு பாராயணனும், ஸ்ரீபாஷ்ய பாராயணமும் தொடர்ந்தன. அரையர் ஸ்ரீராம ஷர்மா என்பவர் கையில் ஸ்ரீகோசமின்றியே நம்பிள்ளையின் படி வியாக்யாநத்தை பாராயணம் செய்த காட்சி அடியேனுக்கு காலம் முழுவதும் மறக்க முடியாத ஒரு அநுபவமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மேல் நாட்டில், தென் கர்நாடகத்தின் கலாசாரத்திற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு இடமொன்று இருப்பதும், அதில் எந்தை இராமானுசநுடைய திருநாமம் ஜபிக்கப் படுவதும், மாறன் தமிழ் மறைகள் ஓதப்படுவதும், அதற்கு விலக்ஷணம் பொருந்திய நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானம் வாசிக்கப்படுவதையும் அந்வயிப்பதே ஒரு புதுவிதமான அநுபவம் தான். ஆசார்ய காலத்து ஸ்ரீரங்கம் எப்படியிருந்திருக்கக் கூடும் என்பதற்கு ஒரு உபமாநமாய் திகழ்கிறது இந்த அனுபவம்.