வெள்ளி, 12 ஜூலை, 2013

நம்மாழ்வார் திவ்ய ஸூக்தி அநுபவம் – பகுதி 1

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் ‘வளவேழ் உலகு’ என்று ஒரு பதிகம். இது ‘அம்சிறைய மடநாராய்’ எனும் பதிகத்திற்கு அடுத்து வருவது. 

அம்சிறைய மடநாராயில் ஆழ்வார் தாமான தன்மை இழந்து, கலங்கி, பெண்மை நிலையை அநுகரித்துக் கொண்டு எம்பெருமானிடம் தன் நிலையை உரைக்க பறவைகளை தூது விடுகிறாள்.

அங்ஙனம் தூதுவிடப்பெற்ற எம்பெருமான், ஆழ்வாரின் ஆர்த்தியை (ஏக்கத்தை) பார்த்து, அவரை வாழ்விக்க திருவுள்ளம் கொண்டு, ஆழ்வாரிடம் எழுந்தருளினான். 

எம்பெருமானையும் தம்மையும் பார்த்தார் ஆழ்வார். “பூ, நீளா தேவிமார்கள், திருவடி, திருவனந்தாழ்வான், முக்தாத்மாக்கள் அநுபவிக்கும் எம்பெருமான் எங்கே? நாம் எங்கே? நாமோ நீசன், நிறை ஒன்றுமில்லாதவன். எனவே, நாம் எம்பெருமானை கிட்டி வாழ்வதைக் காட்டிலும் விலகுவதே சரி” என்று நைச்யானுசந்தானம் பண்ணி (அயோக்யதையை அனுசந்தித்து) ஆழ்வார் விலகப் பார்க்கிறார். இவ்வாறு விலகும் இயல்பைப்பற்றி ‘வளவேழ் உலகில் ஆழ்வார்’ என்று நம் சம்பிரதாயத்து பெரியோர்கள் சொல்வதுண்டு.

ஒரு சமயம் ஆழ்வார், தம் நெஞ்சாலும், வாக்காலும் எம்பெருமானை நினைத்தும், சொல்லியும் அனுபவித்தால், அந்த நெஞ்சும், வாக்கும் குற்றமுடையதாக இருப்பதினால், எம்பெருமானுக்கு குற்றம் உண்டாகுமோ என்று அஞ்சினார். இவ்வாறு எம்பெருமானை பற்றி நினைக்கும் நெஞ்சுக்கும் சொல்லும் வாக்கிற்கும் தாம் குடிகொண்ட புளியமரத்தடி தான் காரணம் என்று கருதி “இனி எம்பெருமானை எண்ணலாகாது, சொல்லலாகாது’ என்று அந்த இடத்தை விட்டு அருகில் இருக்கும் ஒரு குட்டி சுவற்றில் எழுந்தருளினார்.

அப்பொழுது, மூட்டை தூக்கி ஜீவிக்கும் ஒருவன் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டுவர, அந்த மூட்டை மிகவும் கனத்திருந்ததால் சுமைதாங்கி போலிருக்கும் அந்த குட்டிசுவற்றின் மேல் அந்த மூட்டையை இறக்கி வைத்து, திருமகள் கேள்வனனான எம்பெருமானை நினைத்து “செல்வ நாராயணா” என்று அழைத்தான்.

அந்த சொல் நம் ஆழ்வாரின் செவியல் பட, அவ்வளவு தான். அவர் திருக்கண்களிலிருந்து நீர் பெருகி “எங்கே என் செல்வநாராயணன்?” என்று தேடும்படியான நிலைமை உண்டாயிற்று. எம்பெருமானை நெஞ்சினால் எண்ணலாகாது, வாக்கினால் சொல்லலாகாது என்றிருந்த ஆழ்வார் இப்பொழுது எம்பெருமானை தேடி அலைய ஆரம்பித்துவிட்டார்.

செல்வநாரணனென்ற சொற்கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே 

(தொடரும்)

Ref: "நம்மாழ்வாரும் வைஷ்ணவமும் - காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமி"