ஞாயிறு, 30 ஜூன், 2013

திருநாராயணபுரம் ஈடு உத்ஸவ அனுபவங்கள் – பகுதி 3

23/06/2013 ஞாயிறு மாலை மணி 5:30. கேமராவும்-கையுமாக மாமுநிகள் சந்நதிக்கு சென்றேன். சேஷ பர்யந்தத்துடன் ஒரு அமர்க்களமான சாத்துபடி நம் பெரிய ஜீயருக்கு சாற்றியிருந்தார் ஸ்ரீராமன் ஸ்வாமி. சன்னதி முழுவதும் புஷ்ப அலங்காரத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது (இந்த உத்ஸவத்திற்கென்றே பெங்களூரிலிருந்து புஷ்பங்கள் வரவழைக்கப்பட்டது இங்கே குறிப்பிடதக்கது).

கூடை கூடையாக மாம்பழங்கள், ஆப்பிள்கள், சப்போட்டா முதலான பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சன்னதியே ஒரு கல்யாண மண்டபம் போல் காட்சி தந்தது.இதென் பழக்குவியல்?” என்று சன்னதி பரிச்சாரகரிடம் வினவினேன்.செல்லப்பிள்ளை எம்பெருமானாருடன் ஏள்றார் ஸ்வாமி. அவருக்காகவே சேவார்த்திகள் பழம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்என்றார் அவர். சரி, செல்வப்பிள்ளை-எம்பெருமானார் புறப்பாட்டை புகைப்படம் எடுக்கலாமே என்று பெரிய கோவிலுக்குள் சென்றேன்.

அங்கே என்னவென்றால் எம்பெருமானாரை தோளுக்கினியானுடன் எழுந்தருளப் பண்ணும் ஸ்ரீபாதம் தாங்கிகள் வர தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. இதுதான் வாய்ப்பு என்று அடியேனும் இன்னொரு ஸ்வாமியும் எம்பெருமானரை இரண்டு மாட வீதி வரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு முன் சென்றோம். எங்களுக்கு பின்னே உபதேச ரத்தினமாலை கோஷ்டி அந்வயித்துக் கொண்டே செல்வப்பிள்ளை உபய நாச்சிமாருடன் மாமுநிகள் சன்னதிக்கு எழுந்தருளினார்.