சனி, 29 ஜூன், 2013

திருநாராயணபுரம் ஈடு உத்ஸவ அனுபவங்கள் – பகுதி 2

புதுவிடம். எல்லியும் காலையும் ஓயாத காற்று. இரவு கண்வளர நேரமாகிவிட்டது. விழித்து கடிகாரத்தைப் பார்க்கிறேன். காலை 6:45 மணி. காலை 7 மணிக்கு மாமுநிகள் திருமஞ்சன சேவைக்கு ஸ்ரீராமன் ஸ்வாமி வரச்சொன்னது நினைவிற்கு வந்தது. அலறி அடித்துக்கொண்டு சௌக்யம், ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக் கொண்டு சந்நிதியை நோக்கி விரைந்தேன்.

மாமுநிகள் அலங்காரம் களையப்பட்டு திருமஞ்சனத்திற்கு தயாராகவிருந்தார். ஸ்ரீராம் ஸ்வாமியின் தயை மூலம் அன்று  அடியேனுக்கு சந்நிதி கைங்கர்யம் செய்ய ப்ராப்தமாயிற்று. திருமஞ்சனத்திற்கு சந்தனம், மஞ்சள் பொடி, பன்னீர், இளநீர்  முதலியவற்றை தயாரித்து கொடுத்தேன். பிறகு மாமுநிகளுக்கு கண்டருளப் பண்ணுவதற்கு வைத்திருந்த கனிவகைகளை அலம்பி ஒரு தட்டில் வைத்தபடி குங்குமப்பூவும் இடித்து கொடுத்தேன்.

அருகிலிருக்கும் பாடசாலையிலிருந்து இளம் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஈட்டம் சந்நிதிக்கு எழுந்தருளியது. வடகலை, தென்கலை பேதமின்றி அங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் தைத்தரியோபநிஷத் சேவிக்க மாமுநிகள் திருமஞ்சனம் கண்டருளினார்.

காலை 11 மணிக்கு கோஷ்டி தொடக்கம். திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு தொடங்கி திருவாய்மொழி ஒன்பதாம் பத்தில் நூறு பாட்டுகள் சாற்றுமுறை ஆயின. சாற்றுமுறை முடிந்து லெமன் சாதம், பிஸிபேலாபாத், தத்யோனம் என்று ஈடு  உத்ஸவத்தின் வாசிக்கு அனுரூபமான ஒரு ராஜபோகத்துடன் காலை நேர நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.