திங்கள், 24 ஜூன், 2013

திருநாராயணபுரம் ஈடு உத்ஸவ அனுபவங்கள் – பகுதி 1

இந்த வருடம் அடியேனுக்கு திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் ஈடு அவதார திருவுத்ஸவமான ஆனி திருமூல உத்ஸவம் மாமுநிகள் கிருபையால் சேவிக்க ப்ராப்தமாயிற்று.

மாமுநிகள் சந்நிதி அர்ச்சகரான திரு. ஸ்ரீராமன் ஸ்வாமி அடியேனை நெடுநாளாக திருநாராயணபுரம் எழுந்தருள விண்ணப்பித்துக் கொண்டிருந்ததாலும்,  இந்த வருட ஆனி திருமூல உத்ஸவ சாற்றுமுறை வாரக்கடைசியில் அமைந்ததாலும் அடியேன் இந்தச் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ள விழைந்தேன்.

தென்-மேற்கு பருவ மழையின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த கொல்லி நகரமாம் கோழிக்கோடிலிருந்து ஒருவழியாக தப்பித்து மூன்று பேருந்துகள் இறங்கி-ஏறி சனிக்கிழமை மாலை வேலையில் திருநாராயணபுரம் சென்றடைந்தேன்.  அர்ச்சகர் திரு. ஸ்ரீராமன் ஸ்வாமி திருமாளிகையில் அடியேனுடைய பை முதலியவைகளை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று திருநாரண பெருமாள், யதுகிரி நாச்சியார் மற்றும் எம்பெருமானாரை சேவித்தேன்.

திருக்கோவில் வளாகத்தில் திரு. சோளசிம்மபுரம் சண்டமாருதம் தொட்டயாசார் (வர்த்தமான ஆசார்யர்) ஸ்வாமியையும், கோவில் கந்தாடை அண்ணன் திருமணி ஸ்வாமிகளையும் சந்தித்து உரையாடினேன்.

சிறிய திருவடி சந்நிதியில் திரு. ஸ்ரீராம் ஸ்வாமியை சந்தித்த உடனேயே உபசரணைகள் துவங்கிவிட்டன. அவர் அஹத்துக்கு அழைத்துச் சென்று அடியேன் உண்ண பலகாரங்களை கொடுத்து உபகரித்தார். 

அடியேன் சுத்தி முதலானவைகளை முடித்துக் கொண்டு மாமுநிகள் சந்நிதி சென்றடைந்தேன்.  திரு. ப்ர. ப. ராஜஹம்ஸம் ஸ்வாமி கோஷ்டிக்கு எழுந்தருளியிருந்தார். திருவாய்மொழி ஏழாம் மற்றும் எட்டாம் பத்து பாசுரங்கள் சாற்றுமுறை முடிந்து ததியாரதனையுடன் முதல் நாள் விசேஷங்கள் நிறைவு பெற்றன. கோவில் அருகே சின்ன ஜீயர் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படும் குடியிருப்புகளில் சென்று அன்றிரவு இளைப்பாறிக்கொண்டேன்.