வியாழன், 21 பிப்ரவரி, 2013

அஞ்சலி வைபவம்

எம்பெருமானுக்கு இல்லாததொன்றாய், அவனைப் பெருகைக்கு பெருவிலையாய் இருக்குமது அஞ்சலியேயிரே; கருட முத்ரைக்கு விஷம் தீருமாபோலே, “அஞ்சலி: பரமா முத்ரா” என்கிறபடியே இம்முத்ரையாலே அநாத்யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் – என்று.

அஞ்சலி முத்ரையின் பெருமையை தெரிவிப்பது இந்த வார்த்தை. கருட முத்ரையை காட்டினால் விஷம் தீருவதை ப்ரத்யக்ஷமாக கண்கொண்டுக் காணலாம். அது போலே, அஞ்சலி முத்ரையை எம்பெருமான் திருமுன்பே காட்டினால், அநாதி காலமாக செய்துவந்த வினைகளெல்லாம் தீர்ந்து எல்லாப் பயன்களும் கிடைக்கும். 

“அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ” என்ற விஷ்ணு தர்மோத்தர வாக்யம், எம்பெருமானை விரைவில் உகப்பிக்கும் மேலான முத்ரையாக அஞ்சலியை குறிப்பிடுகிறது. இது எம்பெருமானை பெறுவதற்கு தலைச்சிறந்த ஸாதனமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ. வேதாந்த தேசிகர் அஞ்சலியின் மகத்துவத்தை பறைசாற்ற “அஞ்சலி வைபவம்” என்றே ஒரு க்ரந்தம் அருளிச்செய்திருக்கிறார். இந்த கிரந்தத்தில் அஞ்சலிக்கு கால நியமம், க்ரம நியமம், தேச நியமம் இல்லை என்று தெளிவாக காட்டியுள்ளார். ஒரு ஜீவாத்மா தன்னுடைய இயலாமையை (ஆகிஞ்சன்யம்) அஞ்சலி மூலம் வெளிப்படுத்துகிறான் என்றும், ஒரு ஜீவன் அஞ்சலி செய்யும் போது எம்பெருமான் அபய ஹஸ்தத்தை காட்டி அவனை (மாஸுச: என்று) ரக்ஷிக்கிறான்  என்றும் ஸ்வாமி அருளிச்செய்கிறார். 

மேலும், அஞ்சலி செய்வது மற்றை தர்மங்களை கடைப்பிடிப்பதைக் காட்டிலும் மேலானது என்று சாதிக்கிறார் வேதாந்த தேசிகன். மற்றை தர்மங்களை கடைப்பிடிப்பதற்கு தகுந்த கால-நேரங்களையும், அநுட்டிப்பதற்கு பொருந்திய க்ரமங்களையும் சாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றின் பலன்களும் நமக்கு தகுந்த காலம் வரும் பொழுதே சித்திக்கும். ஆனால், அஞ்சலி தர்மத்தை கடைப்பிடிப்போர்க்கு கைம்மேல் பலன் என்றருளிச் செய்கிறார் தேசிகன்.

"த்வதங்க்ரி முத்திச்ய கதாபி கேநசித்" என்று தொடங்கும் ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகத்தில் அஞ்சலி வைபவத்தை ஆளவந்தார் சாதித்து அருளியிருக்கிறார். 

அதாவது, "உனது திருவடி நோக்கி எவனாலாவது, எவ்விதமாவது, ஒரு தடவை பண்ணிய கைக்கூப்பல் அப்பொழுதே பாவங்களை மிகுதியில்லாமல் போக்கிவிடுகிறது; நன்மைகளை வளரச்செய்கிறது; ஒருபோதும் குறையில்லாத வாழ்வை அளிக்கிறது."

இந்த ஸ்லோகத்தில் நோக்கவேண்டிய விஷயங்கள் மூன்று:
எவனாலாவது - அதிகாரி நியமம் இல்லை;
எவ்விதமாவது - க்ரம நியமம் இல்லை
ஒரு தடவை - இதர சமாஸ்ரயணம் போலே அருமைப் பட்டிறாது (பரிவதில் ஈசனை பதிகம் - ஈட்டில் நோக்கவும்)

References:

(1) பின்பழகிய பெருமாள் ஜீயரின் 'வார்த்தாமாலை' - புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பதிப்பு
(2) 'அஞ்சலி வைபவம் ' - வேதாந்த தேசிகர் ஸ்ரீசூக்தி 
(3) ஆளவந்தாரின் 'ஸ்தோத்திர ரத்தினம்' - காஞ்சி PBA ஸ்வாமி உரை