சனி, 16 பிப்ரவரி, 2013

திருப்பாவை ஜீயரும் பகவத் கீதா பாஷ்யமும்

ப்ரஸ்தான த்ரயம் என்று ப்ரசித்தமான ஸ்ருதி ப்ரமாண க்ரந்தங்களுக்கு மதாசார்யர்களான சங்கரர், மத்வர் மற்றும் ராமாநுஜர் வ்யாக்யானம் இட்டருளியிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்தவை. ஆனால் சில ஸ்ருதி வாக்யங்களில் மறைந்திருக்கும் ஆழ்பொருள்களில் எம்பெருமானாருக்கு இருந்த தெளிவு மற்றை மதாசார்யர்களின் வ்யாக்யானங்களிலிருந்து நமக்கு காணக் கிடைக்கவில்லை. இதற்கு திராவிட வேதமாகிய திருவாய்மொழியிலும் அவற்றின் உபப்ரம்மணங்களாகிய மற்றை திவ்ய ப்ரபந்தங்களிலும்  எம்பெருமானாருக்கு இருந்த ஜ்ஞானமும், அவற்றைக் கொண்டு அர்த்த நிர்ணயம் செய்ய ஹேதுவாக ஆழ்வார்களின் அமுதமொழிகளில் இருந்த தெளிவுமே காரணமாகும்.

திவ்ய ப்ரபந்தங்களை ஆதாரமாகக் கொண்டு ஸ்ருதி வாக்யங்களுக்கு நம் சம்ப்ரதாய பெரியோர்கள் அர்த்த நிர்ணயம் செய்தவிடங்கள் ஏராளம். சாஸ்திர அர்த்தங்களை நம் போன்றோருக்கும் தெளிவிக்க அவர்கள் செய்த மஹோபகாரத்தை எடுத்துக் காட்டவும், உபய வேதாந்தந்திலும் அவர்களுக்கு இருந்த பாண்டித்யத்தை பறைசாற்றவும் ஒரு உதாரணம் இங்கே காட்ட முற்படுவோம். பகவத் கீதையில் வரும் ஒரு ஸ்லோகத்திற்கு “திருப்பாவை ஜீயரான” எம்பெருமானார் எப்படி திருப்பாவை பாசுரம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகிறார் என்று பார்ப்போம்.

யத் யதாசரதி ச்ரேஷ்டஸ் தத் ததேவேதரோ ஜந: ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்த்ததே
 
என்பது சிஷ்டாசாரத்தின் சிறப்பைத் தெரிவிக்கும் பகவத் கீதை ஸ்லோகம்.

இந்த ஸ்லோகத்திற்கு பாஷ்யமிட்ட சங்கரர் “ச்ரேஷ்டராய் இருப்பவர் யாதொன்றை ப்ரமாணமாகக் கொள்கிறார்களோ, அதையே லோகமும் ப்ரமாணமாக கொள்கிறது” என்று அர்த்தம் அருளிச்செய்தார். இதற்கு மத்வாசார்யர் இட்ட பாஷ்யமும் இவ்வண்ணமே பொருள் காட்டுகிறது. ஆனால் இந்த ஸ்லோகத்திற்கு பாஷ்யமிட்ட எம்பெருமானார், “சிஷ்டர்கள் தாங்கள் அனுஷ்டிக்கிற கர்மத்திற்கு எவ்வளவு அவதி வைத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவு அவதியே பிறரும் வைத்துக்கொள்கிறார்கள்” என்று அருளிச்செய்தார். எம்பெருமானாரின் பாஷ்யத்தை அடியொற்றியே வேதாந்த தேசிகர் தன்னுடைய தாத்பர்ய சந்திரிகை உரையில் “பெரியோர்கள் அனுஷ்டிக்கிற கர்மத்தை பிறரும் அனுஷ்டிக்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்கள் எந்த விதத்தில் அனுஷ்டிக்கிறார்களோ, அதே விதத்தில் பிறரும் அனுஷ்டிக்கிறார்கள் என்று சொல்லவேண்டியது இங்கு அவசியாமாகிறது” என்று அருளிச்செய்தார். 

இப்படி மற்றை மதத்தாருக்கு தோன்றாத அர்த்தம் நம் பாஷ்யகாரருக்கு தோன்றியது எதனால் என்னில் அவர் திருப்பாவை ஜீயர் என்று பிரசித்தி பெற்றிருந்ததனால். மாலே மணிவண்ணா பாசுரத்தில் “மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்றுள்ளது. இங்கே “மேலையார் செய்வனகள் கேட்டியேல்” என்பதே போதுமானதாயிருக்க இடையில் “வேண்டுவன” என்று ஆண்டாள் பிரயோகித்ததற்கு அவசியமேன்? 

சாஸ்திரங்களில் எத்தனையோ அநுஷ்டானங்கள் சொல்லப்பட்டிருக்கும்; அவற்றை எல்லாம் சிஷ்டர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள். அவர்கள் நன்கு அறிந்தவர்கள் ஆகையாலே, எந்தக் கர்மங்களுக்கு ஒரு பலனுமிராதோ, அந்த கர்மங்களை மாத்திரம் அவஹிதர்களாய் அநுஷ்டிப்பார்கள். அதையே லோகமும் அநுவர்த்திக்கும். 

“சூடிக்கொடுத்தவள் தொல்லளருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்” என்றபடி ஆண்டாள் காட்டிக்கொடுத்த பொருளையே எம்பெருமானார் தம் பாஷ்யத்தில் இட்டருளினார். 

Ref: திராமிடோபனிஷத் பிரபாவ சர்வஸ்வம் - காஞ்சி ஸ்வாமி