சனி, 5 ஜனவரி, 2013

பல்லாண்டு பல்லாண்டு

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். ஒரு அரசியல் வாசகம் கூவுகிறது. சிறியவர்கள் பெரியவர்களிடம் வாழ்த்தும் ஆசியும் பெறுவது நம் பண்பாடும் கலாச்சாரமும் ஆகும்

'நோய் நொடியில்லாமல் வாழ்க', 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என்று பெரியவர்கள் வாழ்த்துவது வழக்கம்.

சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதுண்டா? ஆசி பெறுவது உண்டு. ஆனால், சிறியவர் பெரியவருக்கு ஆசி கொடுக்கும் தகுதி இல்லை.

பாண்டிய நாட்டு பெரியாழ்வாருக்கு இது தெரியாதா? மனிதனுக்கு மனிதன் இப்படி பெரியவர் சிறியவர் பார்க்கையில், எல்லோருக்கும் பெரியவனான பெரிய கடவுளான பெரியவனுக்கு இவர் வாழ்த்து கூறுவது முரண் இல்லையா? நம் பண்பாட்டுக்கு இது ஒவ்வாதல்லவா?

அப்படி என்ன சொல்லிவிட்டார் அவர்? பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் பல்லாண்டு மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேணும், பலகோடி நூறாயிரம் பல்லாண்டு நன்றாக இருக்க வேணும் என்று இவர் கடவுளுக்கே வாழ்த்து சொல்கிறார்.

அவனோ எல்லா சக்தியும் நிறைந்தவன். எல்லாவற்றையும் படைத்து அழித்துக் காப்பவன். உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் அல்லா அல்கிலா விளையாட்டுடையவன் அவன். அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நமக்கு என்ன தகுதி உண்டுஇப்படி பெரியாழ்வார் பாடியது தவறு இல்லையா?

வைணவப் பெரியவரான பிள்ளை உலகாசிரியர் இந்த பேரைய்யத்தை தெளிவிக்கிறார்.

நம்முடைய அறிவு முதிற்சி நிலையில் அவன் சக்திமான், எல்லாவற்றிற்கும் மேலானவன், அப்பாற்பட்டவன் என்பது அறிவோம். ஆனால், ஒரு தாய்ப்பாசம் போல், அவனிடம் பேரன்பு பெருகும் தசையில் இந்த நினைவு மாறியிருக்கும்.

அதாவது, அவன் நம்மை பாதுகாப்பவன் என்னும் நினைவு, அறிவு நடையாடும் நிலையில் இருக்கும். பேரன்பு கரை புரளும் வேளையில் இது மாறி அவனை நாம் பாதுகாக்க வேணும் எனும் நிலை எய்துகிறார்கள் இவர்கள்.

அது எப்படி, நிலை மாறுமா? அவனுடைய மேன்மை நோக்குகையில் அவன் நம்மைக் காப்பவன் என்பது உணரலாம். அவனுடைய அழகும், மென்மையும் நோக்குகையில், 'ஐய கோ! இவனுக்கு என்ன துன்பம் வருமோ!' என்று கவலை தோன்றும்.

இப்படி, பெரியாழ்வாரைப் போல், அவனுக்கு என்ன தீங்கு வருமோ என்று பயந்தவர்கள் இருந்தார்களா

இருந்தார்கள்.

இவர் தனி இல்லை. இவரைப் போல், சீதா பிராட்டி, தசரதர், விச்வாமித்ர மஹரிஷிவிதுரர், தண்டகாரண்ய முனிவர்கள், சுக்ரீவ மகராஜர், ஹநுமார், பிள்ளை உறங்காவில்லி தாசர் யாவரும் இதைப் போல் அவனுடைய நலத்தை சிந்தித்தவர்கள்.

தசரதர்
இராமபிரான் பல அரக்கர்களைக் கொன்று விச்வாமித்ர முனியின் வேள்வியை காத்து, வில்லை முறித்து சீதாதேவியை மணம் புரிந்து வரும்கால், பரசுராமன் எதிர் வந்து 'உன் வீரத்தை என்னிடம் காட்டுஎன்று அறைகூவல் விடுகையில், தசரதர் அதற்கு அஞ்சி, அவரிடம் மன்றாடினார் என்று காண்கிறோம். இது இராமபிரான், சிறியவன், மென்மையானவன், என்னும் பாசத்தின்கண் அவனுடைய வீரம் அவருக்கு புலப்படவில்லை.

விஸ்வாமித்ர மகரிஷி
விச்வாமித்ர மஹரிஷி, தாடகை மிகுந்த சீற்றத்துடன் எதிர் வரக் கண்டு, இராமபிரானின் பராக்கிரமத்தை அறிந்து வைத்தும், இந்த இரு பிள்ளைகளுக்கும் நல்லது உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார்.

ஜனகராஜன் திருமகள் சீதா பிராட்டி
இராமபிரான் திருமுடி சூடுவதற்கு சக்கரவர்த்தி திருமாளிகைக்கு செல்கையில், அவனுக்கு  தீங்கு ஏதும் நேரக்கூடாது என்று நான்கு திக் பாலர்களையும் வேண்டிக் கொள்கிறாள்.

இராமபிரானின் பராக்ரமத்தை அறிந்தவள் அவள். அவன் அழகும், மென்மையும் கண்டு, அதற்கு என்ன வருமோ என்று அஞ்சி இப்படி திக் பாலர்களை பிரார்த்திக்கிறாள்!

தண்டகாரண்ய மகரிஷிகள்
தங்களுடைய விரோதிகளை போக்குவதற்கு இவனே சௌர்யத்தில் சிறந்தவன் என்று நிர்ணயித்து அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தும், அவன் வந்தவுடன், அவன் வடிவழகில் மயங்கி, அவன் நலன் கருதிஅவனுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்திக்கின்றனர்.

சுக்ரீவ மகாராசர்
இராமபிரான் அதிபலசாலியான வாலியைக் கொன்று சுக்ரீவ மகாராஜருக்கு பட்டம் கட்டினார்அவனுடைய வீர, தீர, சௌர்யத்தை நன்கு உணர்ந்தவர் சுக்ரீவ மகாராசர். அறிந்து வைத்தும், விபீஷனாழ்வான் இராமபிரானை சரணம் அடைய வந்திருக்கையில், அவனால் என்ன தீமை வருமோ என்று பயந்தார்.

ஸ்ரீ விதுரர்
துரியோதனன் கண்ணபிரானுக்குப் பொய்யாசனமிட்டான்கண்ணபிரான் தன்  தீரச் செயலினால் அவர்களை வீழ்த்தினான்.

அவனுடைய அளவற்ற ஆற்றலை அறிந்திருந்தும், ஸ்ரீ விதுரர் கண்ணபிரான் தன்னுடைய தயுர்மாளிகைக்கு வருகையில், அவர் தான் இட்ட ஆசனத்தையே சோதித்து பார்த்தார்.

இப்படி, கௌசல்யா தேவி, தேவகி பிராட்டி, ஸ்ரீ வசுதேவர், நந்தகோபர், பிள்ளை உறங்காவில்லி தாஸர் முதலான பலர், எம்பெருமானின் சக்தி தெரிந்தும் அவனுடைய மென்மையக் கண்டு மேன்மையை மறந்தனர்.

இது பேரன்பினால் விளைந்த பயத்தினால் விளைந்தது.

அன்பும், தாய்ப் பாசமும், குறை என்றாலல்லவோ, இது குற்றம்இன்னும் சொல்லப் போனால், இது இவ்வாத்மாவுக்கு குற்றமல்ல, குணம் என்றே கொள்ளலாம்.

நாமும் பல்லாண்டு பல்லாண்டு கோஷ்டியில் சேருவோமா?

எழுதியவர்: வானமாமலை பத்மநாபன்