புதன், 28 நவம்பர், 2012

நம்பிள்ளையின் ஈட்டில் சுருதிச் சாயை

நம்மாழ்வார் அருமறையின் பொருளையே அழகிய தமிழில் வெளிப்படுத்தினார் என்பது நாம் நன்கு அறிந்தது. மாறனின் திருவாய்மொழிக்கு வ்யாக்யானமிட்ட உரையாசிரியரான நம்பிள்ளைக்கு இது ஒரு தலையாய கோட்பாடு. இந்த கோட்பாட்டை அடியொற்றி நம்பிள்ளை அருமையாக உரை வகுத்த இடங்களில் சிலவற்றை நோக்குவோம்.

(1) ஓராயிரமாய் (9-3) என்ற பதிகத்துள் ‘நாராயணன்’ என்ற சொற்பொருளின் விளக்கமாய் ஒரு பாசுரம் அமைந்திருக்கிறது: 

அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டுமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே

இந்த பாசுரத்தின் மூன்றாம் அடியான ‘அவனே அவனும் அவனும் அவனும்’ என்பதற்கு பொருள் கூறல் சற்று கடினம். ஏனெனில், இந்த மூன்றாம் அடிக்கு கருத்து ‘பிரமன், சிவன், இந்திரன் ஆகிய மூவரின் தோற்றரவு, நிலைபேறு, இயக்கங்கள் யாவும் அவனாகிய நாராயணன் இட்ட வழக்கு’ என்பதாம். இங்கு இம்மூவரின் பெயர் இல்லாமலிருந்தும், உபநிடத வாக்யங்களைக் கொண்டு அப்பெயர்களைக் காண்கிறார் நம்பிள்ளை. அதாவது, ‘ஸ: ப்ரஹ்ம்மா ஸ: சிவ ஸ: இந்திர:’ என்று வரும் நாராயண அநுவாக (6:11) உபநிடத வாக்யத்தில் மும்முறை வரும் ‘ஸ:’ என்கின்ற பதத்தையே ஆழ்வார் வெளியிட்டு வேதம் தமிழ் செய்கிறார் என்பது நம்பிள்ளையின் அந்வயம். 

(2) சொற்பொருளை விளக்கும் இடங்களில் சுருதித் தொடர்களைக் காட்டுவது நம்பிள்ளையின் சாமர்த்தியம். ‘சுரர் அறி வரு நிலை விண்’ (1-1-8) என்று வரும் தொடரில் ‘விண்’ என்ற சொல்லுக்கு மூலப்ரக்ருதி என்று பொருள் கொள்ள வேண்டும்; ஆகாயம் என்ற நேர்பொருளைக்  கொள்ளக்கூடாது என்று காட்டும் நம்பிள்ளையின் உரை கீழ்வருமாறு:

“கார்க்கி வித்யையிலே ஆகாச சப்தத்தாலே மூலப் பிரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாச சப்தத்தாலே மூலப்ரக்ருதியை அருளிச் செய்கிறார்”.

ப்ருஹதாரண்யக உபநிடத்தில் ‘அஸ்மிந்கலு ஆகாச ஓதச்ச ப்ரோதச்ச’ (ஆநந்தவல்லி 6:3) என்று வருமிடத்தில் ‘ஆகாச’ சப்தம் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது. இதனைத் தழுவியே தமிழ் மறையான திருவாய்மொழியிலும் ஆழ்வார் அருளிச்செய்கிறார் என்பது நம்பிள்ளையின் கருத்து. 

(3) வேத நடைகளைப் பின்பற்றி உரை எழுதுவதில் நம்பிள்ளையின் திறன் அசாதாரணமானது. ‘மேருமோர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான்’ என்ற பாசுர தொடரை ‘ஓர் ஆயிரம் பேரும் பிற(வும்) பலவுடைய எம்பெருமான்’ என்று மாற்றி அந்வயம் செய்கிறார். சாந்தோக்ய உபநிடத்தில் ‘நாமரூபேவ்யாகரவாணி’ (6:3) என்று பெயரோடு உருவமும் சேர்ந்து கூறப்பட்டிருப்பதால், தாமும் ‘பிற’ என்கிற சொல்லுக்கு திருமேனி என்று பொருள் கொண்டதாகக் காட்டுகிறார்.

References:
(1) 'திருவாய்மொழி ஆசிரியர் நம்பிள்ளை உரைத்திறன்' – மதுரை அரங்கராஜன் ஸ்வாமி     
(2) 'திருவாய்மொழியில் உபநிடத கருத்துக்கள்' – மாடபூசி வரதராஜன் ஸ்வாமி