புதன், 28 நவம்பர், 2012

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வைபவம்

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கார்த்திகை மாதத்தில் பரணி நக்ஷத்திரத்தில் தோன்றியவர். இவர் அத்வைத மதஸ்தராயிருந்து எம்பெருமானாராலே திருத்திப் பணிகொள்ளப் பெற்றவர். அவ்வரலாறு கீழ்வருமாறு:

யஞ்யமூர்த்தி என்னுமொரு மாயாவாதி ஸந்யாஸி, எம்பெருமானாருடைய வைபவத்தை கேட்டறிந்து அவரோடே தர்க்கித்து வெற்றிபெற வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். அவன் கோவிலிலே ஸ்வாமி மடத்திற்கு வந்து சேவித்து "நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நீர் விடை கூற வேண்டும்; திருப்திகரமாக விடைபெற்றேனாகில் உமக்கு சிஷ்யனாகக் கடவேன்" என்று சொல்ல, ஸ்வாமியும் இசைந்தருளினார். பதினேழு நாள் வரை வெற்றி தோல்வியின்றியே வினா-விடை செல்லாநின்றது. முடிவில் உத்தரம் அருளிச்செய்ய வேண்டிய பொறுப்பு ஸ்வாமி பக்கலில் வந்து நின்றது. ஸ்வாமிக்கு விஷயம் தோன்றாமே இருக்கையில் 'நாளைக்கு ஆகிறது' என்று சொல்லி அன்றைய தினத்திற்கு ஸபையை கலைத்து விட்டார்.

பிறகு ஸ்வாமியின் திருவுள்ளம் மிகவும் வ்யாகுலப்பட்டு தமது திருவாராதன எம்பெருமானான பேரருளாளரை திருவடி விளக்கி, அமுது செய்யப்பண்ணி, 'ஆழ்வார் தொடங்கி, ஆளவந்தார் அளவாக இத்தனைக் காலம் ஒரு குறையுமின்றியே விளங்க வந்த இந்த தரிசனம் இன்று அடியேனால் பங்கமடையலாமா? இப்படியும் ஒரு லீலை கொண்டாட திருவுள்ளம் பற்றினாயோ?' என்று விண்ணப்பஞ்செய்து அமுது செய்யாமலேயே திருக்கண் வளர்ந்தருளினார். அன்றிரவு பேரருளாளர் எம்பெருமானாரின் கனவிலே எழுந்தருளி அந்த மாயாவதியின் வாயடைக்கும் படியான சில அர்த்த விசேஷங்களை ஸ்புரிக்கச் செய்து மறைந்தார்.

மறுநாள் ஸ்வாமி சிற்றஞ்சிறுகாலை எழுந்து பரமசந்தோஷத்துடன் நித்யானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு விசார கோஷ்டிக்கு எழுந்தருளினார். ஆனால் யஞ்யமூர்த்தியோ இன்று நமக்கு தோல்வியே திண்ணமென்று நிச்சயித்து எம்பெருமானாரின் திருவடிகளிலே 'அடியேனை அங்கீகரித்து அருளவேண்டும்' என்றுச் சொல்லி சாஷ்டாங்க பிரணாமமிட்டார். யஞ்யமூர்தியின் செயலைக் கண்டு 'இதுவென்?' என்று ஸ்வாமி வினவ "தேவரீருக்கு பெரிய பெருமாள் ப்ரத்யக்ஷமான பின்பு தேவரீர் என்றும் எம்பெருமான் என்றும் வாசி உண்டோ? இனி  தேவரீரின் ஸந்நிதியில் அடியேன் ஒரு வார்த்தை சொல்ல ப்ராப்தியில்லை; இந்த ஆத்மா இதுவரை அனர்த்தப்பட்டது போதும்; இனியும் அனர்த்தப்படாதபடி போக்கி அருளவேண்டும்" என்று ஏகதண்டத்தை முறித்து, பிராயச்சித்த பூர்வகமாய் சிகை, யஞ்யோபவீதங்களையும், பஞ்ச ஸம்ஸ்கார இத்யாதிகளையும் ஸ்வீகரித்துக் கொண்டு, முக்கோல் பிடித்த முனியாகி சாஸ்திரப்படி ஆசார்யனின் திருநாமத்தையே வஹிக்க விரும்பி பிரார்த்திக்க, ஸ்வாமியும் பேரருளாளன் பிரஸாதமடியாகவே இவர் ஆட்பட்டார் என்கிற உபகாரச்ம்ரிதியை கருதி இவருக்கு 'அருளாளப் பெருமாள் எம்பெருமானார்' என்கின்ற திருநாமத்தை இட்டருளினார். உடனே, அவரை அழைத்துச் சென்று, பெரிய பெருமாளை சேவிக்கப் பண்ணி, திருப்பல்லாண்டு தொடங்கி நாலாயிரமும் ஓதுவித்து, மற்ற தத்வசிக்ஷைகளையும் செயவித்தருளினார்.

Ref: பன்னிரு திங்கள் அனுபவம், காஞ்சி ஸ்வாமி.