சனி, 24 நவம்பர், 2012

ஈட்டில் தமிழர்கள்

ஆசார்யர்கள் தம் வ்யாக்யானங்களில் ‘தமிழன்’ என்றும் ‘தமிழர்’ என்றும் பிற உரையாளர்களைச் சுட்டி காட்டுகின்றனர். இதனைச் சிலர் இகழ்ச்சி குறிப்பு என்று கருதுவதுண்டு. பூதத்தாழ்வார் தம்மைப் ‘பெருந்தமிழன்” என்று அறிவித்துக் கொண்டதையும், மதுரகவியார் நம்மாழ்வாரை “தமிழ்ச் சடகோபன்” என்று பாராட்டியதையும் நன்கு அறிந்த ஆசார்யர்கள் ‘தமிழன்’ என்பதை இகழ்ச்சி குறிப்பிட்டு சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

நம்பிள்ளை, தமது உரையில் ‘தமிழன்’ என்று திருவள்ளுவரையும், ‘தமிழர்’ என்று தொல்காப்பியரையும் அழைக்கின்றார். இதனால் தமிழ் நூல் வல்ல புலமைச் சான்றோர்களை அவ்வாறு இயற்பெயரன்றி பொதுப்படக் குறித்தனர் என்பது தெளிவு.  அதே போல், ஒரு ஆசார்யரிடம் திருவிலச்சனை முதலிய வைணவ சமய தீட்சைகளை பெற்றுக் கொண்டோர் தமிழ் புலமை பெற்றிருந்தாலும் ‘தாஸ்ய’ நாமங்களாலேயே குறிப்பிட பட்டுள்ளனர். இதற்கு உதாஹரனங்களாக பிள்ளை உறங்காவில்லி தாசர், திருவழுதி வளநாடு தாசர் போன்ற பல பெயர்களை ஈட்டில் காணலாம். இவர்கள் யாவரும் தமிழர்களே, திருவாய்மொழிக்கு பொருள் நிருவியவர்களே. ஆனாலும், இவர்களை தமிழர் என்னாது சிறப்பு திருப்பெயர்களால் குறித்தார் நம்பிள்ளை. 

மேலும், தமிழர் என்ற போது சாதி கருதப்படவில்லை – அந்தணர் குலத்தில் பிறந்த ஆசிரியர் ஒருவரையும் ‘தமிழர்’ என்று குறிப்பிடுவது ஈட்டிலிருந்து நன்கு தெரிகிறது. திருவாய்மொழியில் வரும் "பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் பரவும் ஓராயிரம்" என்ற தொடரின் வ்யாக்யானத்தில் கூரத்தாழ்வான் நிர்வாஹமாக 'பாலேய் தமிழருக்கு' உதாஹரனமாக "ஸ்ரீ பராங்குச நம்பி" என்னும் ஆசார்யரை காட்டுகிறார் நம்பிள்ளை. இந்த பராங்குச நம்பி என்பவர் எம்பாரின் திருத்தம்பியாரான சிறிய கோவிந்தப் பெருமாளின் திருக்குமாரர். 

தமிழர் ஓரோர் இடங்களுக்கு பொருள் நிருவியதோடன்றி திருவாய்மொழி முழுமைக்கும் பொருள் விரித்து உரை எழுதியிருந்ததாகவும் ஈட்டிலிருந்து அறியப்படுகிறது.

என்று...வ்யாக்யானம் பண்ணினார்கள் தமிழர்கள்” (3-9-2)
என்று ஒரு தமிழன் வ்யாக்யானம் பண்ணினான்(3-9-7)

என்று வரும் ஈட்டு தொடர்கள் அதை உறுதி செய்கின்றன. மேலும், இந்த வ்யாக்யானங்கள் வாய்மொழி விரிவுரைகள் அல்ல, எழுதப்பட்டவையே என்பதற்கு சான்றாக மேலும் சில இடங்கள் ஈட்டிலிருந்தே நாம் ஆறியப் பெறுகிறோம்:

ஒரு தமிழன் இட்டு வைக்கிறான்” (4-6-2)
ஒரு தமிழன் தாத்பர்யமாக இட்டு வைக்கிறான்” (5-4-6)
என்று ஒரு தமிழன் இட்டு வைத்தான்” (7-7-2; 7-7-6)

இப்படி தமிழர்கள் உரைகள் இட்டு நிறுவிய பொருள்களை ஆசார்யர்கள் ஏற்றனரா என்ற கேள்வி எழலாம். ஆழ்வார்களுடைய இயல்புக்கும், சம்ப்ரதாய கோட்பாடுகளுக்கும் முரணின்றி பொருந்தும் எந்த அர்த்தத்தையும் நம்பிள்ளை ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. பெரியவாச்சான் பிள்ளை தமது வ்யாக்யானங்களில் தமிழருடைய பொருளாட்சிகளாக பிரித்துக் காட்டியவற்றை நம்பிள்ளை அப்படியே ஈட்டில்  தழுவிக் கொண்டிருப்பதை நான்கு இடங்களில் காண்கிறோம்.

சரி, திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் இட்ட இந்த தமிழர்கள் யார்?

தனது “திருவாய்மொழி ஆசிரியர் நம்பிள்ளை உரைத்திறன்”-இல் மதுரை ஸ்ரீ. அரங்கராஜன் ‘கரிக்காற் சோழ பிரமராயன்’ மற்றும் ‘தமிழாசிரியர்’ என்று பெயர் கொண்ட இருவரை உதாஹரனங்களாக காட்டியுள்ளார்.

ஆனால் இந்த தமிழ் புலவர்களிட்ட திருவாய்மொழி உரைகள் காலப்போக்கில் பேணுவாரின்றி மறைந்து போய்விட்டன. நம் ஆசார்யர்கள் இவ்வுரைகளையும் தழுவிக் கொண்டதினால், இவைகளின் அழிவுக்கு அவர்கள் காரணம் ஆகமாட்டார்கள்.  மேலும், ஆழ்வார்களின் அநுபவ மொழிகளை ‘அதிவாதம்’ என்றும் ‘உயர்வு நவிற்சி’ (exaggeration) என்றும் கூறி வந்த சிலரை வைணவ உலகம் புறக்கணித்திருக்கலாம். இதனால் இந்த உரைகள் அழிந்து போயிருக்கலாம்.

இவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு மரபுவழியாக வரும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமனுஜர், பட்டர் போன்றோரின் வாய்மொழி உரைகளும் திருவாய்மொழிக்கு இருந்திருக்கின்றன என்பது ஈட்டில் மற்றும் பிற இடங்களில் காட்டப்படும் ஐதிஹ்யங்களில் காண முடிகிறது.