செவ்வாய், 13 நவம்பர், 2012

பராசர பட்டரின் பால்யம்

பட்டர் என்று கொண்டாடப்படும் பராசர பட்டரை எம்பெருமான் தம் குமாரராக அங்கீகரித்துக் கொண்டார் என்றும் பெரியகோவிலில் உள்ள திருமணத்தூன் அருகே அவரைத்  தூளி கட்டி வளர்த்தார் என்ற சரித்திரத்தை நாம் நன்கு அறிவோம். இன்று பட்டரின் பால்யத்தில் நடந்த சில நிகழ்வுகளை படித்து ரசிப்போம்.

௧) பட்டருக்கு வயது ஐந்து. ஆழ்வான் “நெடுமார்க்கடிமை” என்கின்ற திருவாய்மொழி பதிகத்தை அனுசந்தித்துக் கொண்டிருந்தார். ஆழ்வான் “சிருமாமனிசராய் என்னை ஆண்டார்” என்ற இடத்தை அனுசந்தித்துக் கொண்டிருந்தபோது பட்டர் அவரை நோக்கி “அய்யா! ஒரு பொருள் சிறியதாக இருக்கலாம், அல்லது பெரியதாக இருக்கலாம். அப்படி இருக்க, ஆழ்வார் ஒரே பொருளில் சிறியதும் இருக்கிறது, பெரியதும் இருக்கிறது என்கிறாரே – இது எப்படி சாத்தியம்?” என்று வினவினார்.  ஆழ்வான் அதிசயித்து “நல்லாய்! உமக்கு இன்னும் உபநயனம் ஆகாமையால் சாஸ்திரங்களின் பொருள் கொண்டு உமக்கு விளக்கக் கூடாது. ஆனால் பிரத்யக்ஷத்தாலே காட்டுகிறேன் வா” என்று அவரை கூட்டிச்சென்று “இதோ சிரியாச்சான் பிள்ளை, அருளாளப் பெருமாள் எம்பெருமானார். இவர்களளெல்லாம் உடல் மெலிந்து சிறுமை உடையவர்களாக இருப்பினும் ஞானம் பெருத்துப் பெருமையுடையவர்களாகவும்  இருக்கிறார்கள் அல்லவா? இப்படிபட்டவர்களைத் தான் ஆழ்வார் “சிருமாமனிசர்” என்று அருளிச் செய்திருப்பதாகச் சொன்னாராம்.

௨) மற்றொருநாள் பட்டர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, “சர்வக்ஞ்ய பட்டர் வந்தார்” என்று ஒரு வித்வான் எக்காளம் ஊதிக்கொண்டு வந்தார். “இது யாரடா! எம்பெருமானார், முதலியாண்டான், ஆழ்வான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போன்றவர்கள் வசிக்கும் ஊரில் சர்வக்ஞ்ய பட்டன் என்று விருது ஊதிக்கொண்டு வருவது” என்றெண்ணி, வீதியிலுள்ள புழுதியை தம் இரண்டு கைகளாலும் அள்ளிக்கொண்டு அவ்வித்வானிடம் சென்று “நீர் சர்வக்ஞர் அன்றோ! இது எத்தனை சொல்லும்?” என்று புழுதியைக் காட்டினார் பட்டர். அதற்கு அந்த பட்டன் பிடிமண் என்று பதில் சொன்னால் பட்டர் எண்ணிக்கையில் எவ்வளவு என்று கேட்பாரோ என்றஞ்சி வெட்கி தலை குனிந்து நின்றார். இதைக் கண்ட பட்டர் “ஒரு பிடிமண் என்று சொல்லத்தெரியாத உமக்கு சர்வக்ஞன் பட்டம் அவசியம்தானோ?” என்றார். இது கேட்டு அவ்வித்வான் பட்டர் இன்னார் என்று அறிந்து “பரப்பதின் குட்டி தவழுமா?” என்று சொல்லி பட்டரை தன் பல்லக்கில் ஏற்றி ஆழ்வான் திருமாளிகையில் விட்டுவிட்டுச் சென்றார். இதை அறிந்த பொன்னாச்சியார் (பிள்ளை உறங்காவில்லி தாசரின் பார்யை) கண்ணெச்சில் படுமே என்று த்வயானுசந்தானம் பண்ணிக்கொண்டு பட்டரை உள்ளே அழைத்துச் சென்றாராம்.  

௩) உபநயனம் ஆன பின்பு பட்டரை வேதம் ஓத விட்டார்கள். மறுநாள் சென்ற பட்டரோ “முதல் ஓதியதையே ஓதுகிறார்கள்” என்று ஓதாமல் திரும்ப வந்து விளையாடிக் கொண்டிருந்தார். “இதென்?” என்று ஆழ்வானும் ஆண்டாலும் கேட்க, பட்டரும் விவரத்தைச் சொன்னார். அவ்வாறாகில் "பயின்றதை ஓதிக்காட்டு" என்று ஆழ்வான் கேட்க, ஸ்வரம் தப்பாமல் ஓதிக்காட்டினார் பட்டர். ஆழ்வானும், ஆண்டாலும் “இது இந்த வயதுக்குத் தகாது!” என பயந்து இன்னும் சில நாள் கழித்து ஓத விடுவோம் என்று பாடத்தை நிறுத்தியே வைத்து விட்டார்களாம்.

(பூர்வாசார்ய வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்...)

Ref: குரு பரம்பரை வைபவம்யதிராஜ ராமானுஜ தாசர்ஆழ்வார்கள் அமுத நிலையம்௧௯௮௭