வியாழன், 25 அக்டோபர், 2012

முதலாழ்வார்கள் அனுபவம்

நம் சம்பிரதாயத்தில் முதலாழ்வார்கள் என்று கொண்டாடப்படுகின்ற பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் மூவர் ஓடித் திரியும் யோகிகளாய், தம்மில் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் ஆகவும், இம்மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து ஆட்கொள்ள எம்பெருமான் குதூஹலம் கொண்டிருந்ததாகவும், ஒரு நாள் சூரியன் அஸ்தமித்த பின்பு பொய்கை ஆழ்வார் கனமழையினால் திருக்கோவலூரை அடைந்து ம்ருகண்டு மகரிஷியின் திருமாளிகையில் சென்று அதன் இடைக்கழியில் பள்ளிக்கொண்டிருக்க, பூதத்தாழ்வாரும், பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கே மூவரும் அளவளாவி நிற்கையில், இவர்களை எம்பெருமான் நெருக்கிக் கலந்து பரிமாறினதாகவும் சரித்திரம் கூறப்பட்டு வருகிறது. இதனால் முதலாழ்வார்களுக்கு திருக்கோவலூரில் மிக்க ஈடுபாடென்பது விளங்குகிறது. அன்யோன்யம் கொண்டிருக்கிறவர்களாக சொல்லப்பட்ட ஆழ்வார்களுள் சர்வ கநிஷ்டரான திருமங்கை ஆழ்வார், திருக்கோவலூர் பதிகம் பாடுமிடத்து இவ்வரலாற்றினை அனுசந்திக்கும் அழகே அழகு.


பெரிய திருமொழியில் திருக்கோவலூர் பதிகத்தில் நான்காம் பாசுரத்தில் (2-10-4) "ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆராமுதம் ஆனான் தன்னை" என்ற இடத்திற்கு ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டி அருளப்பட்ட பரமரஹஸ்யத்தை பார்ப்போம்:

மூன்றாம் பிரகரணத்தில் மேகத்துக்கு ஸ்வாபதேசம் அருளிச்செய்யும் "பூண்ட நாள் சீர்க்கடலை யுட்கொண்டு" இத்யாதி சூர்னையில் "அன்பு கூறும் அடியவர்" என்றுள்ளதை வ்யாக்யானமிட்டு அருளின மணவாள மாமுனிகள் "ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவரான முதலாழ்வார்கள்" என்று அருளிச் செய்திருக்கிறார். அதாவது, அடியவர்களுக்கு அமுதமாக இருந்தவன் திருக்கோவலூர் எம்பெருமான் என்றும், அங்கு அடியவர்கள் என்ற சொல் முதலாழ்வார்களைக் குறிக்கும் என்று நம் பூர்வாசார்யர்கள் திருவுள்ளம் பற்றி இருந்தார்கள் என்பது "நேர் தண்ணின் படியைத் தணவாத" மாமுனிகளின் சொல் மூலம் நமக்கு அறியலாகிறது. இந்த நிர்வாஹம் மிகவும் உபபத்தியோடு (demonstrated conclusion) கூடியது. இதனை சற்று விரிவாக பார்ப்போம். 

இந்த பெரிய திருமொழி பாசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடியவர்களை ௧) அடியவர், ௨) அன்பு கூறும் அடியவர், ௩) அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்வோம்.

முதலில் சொல்லப்பட்டிருக்கும் "அடியவர்" பேயாழ்வாரை குறிக்கும். இவர் "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை தாம் காணப்பெற்றதாக பேசி, அந்த திவ்ய மங்கள திருமேனியில் திருவடிகள் ஒன்றே தமக்கு உத்தேச்யம் என்பதை தம் திருவந்தாதியில் "இன்றே கழல் கண்டேன்", "பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து", "முயன்று தொழு நெஞ்சே!...தண்ணலங்கள் மாலையான் தாள்" போன்ற இடங்களில் வெகு அழகாக காட்டியுள்ளார். எம்பெருமானின் அடியையே சிக்கெனப் பற்றினவர் என்ற காரணத்தினாலே பேயாழ்வார் அடியவராகக் கூறப்பட்டார்.

"அன்பு கூறும் அடியவர்" என்றது பூதத்தாழ்வாரை. "அன்பு கூறும்" என்பது "அன்பு மிகுந்தவர்" என்று அர்த்தமாகும். பூதத்தாழ்வார் "அன்பே தகளியா" என்று தொடங்கி "விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு" என்று முடிவு பாசுரத்தில் தமது அன்பின் மிகுதியை வாய்விட்டு உரைத்தவர் ஆகையால் இவரே அன்பு கூறும் அடியவராக நாம் கொள்ளத் தகுதி உடையவர்.

இனி "அரும்பிக் கண்ணீர் சோரும் அடியவர்" பொய்கையாழ்வார். ஏனென்றால், இவ்வாழ்வார் "பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன்" என்று தம் வாக்கினால் பேசி அருளினபடி அரும்பிக் கண்ணீர் சோர்ந்திருப்பவர் ஆதலால்.

ஆக, இந்தப் பாசுரம் மூலம், முதலாழ்வார்களைக் கூறி, அவர்களுக்கு அமுதமாய் இருந்தவன் திருக்கோவலூர் எம்பெருமான் என்று கலியன் சாதித்து அருளியிருக்கிறார்.

Ref: பன்னிரு திங்கள் அனுபவம் - காஞ்சி P.B.A ஸ்வாமி.