வியாழன், 11 அக்டோபர், 2012

எம்பார் குண விசேஷங்கள்

உடையவரின் தம்பியும் எம்பார் என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊரு விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உலங்கனிந்தார்.

ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார். நம்பிகள்இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையேஎன்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “பித்தனைப் போகச் சொல்லுங்கோள்என்று வெறுத்துக் கூறினார். இது கேட்ட நம்பிகளின் தேவியார், “இதென்; இத்தனை தூரம் இளைத்து வந்தவரை அழைத்து முகம் காட்டித் தீர்த்த ப்ரஸாதங்களும் கொடுத்து அனுப்பவேண்டாவோஎன்ன விற்ற பசுவுக்கு புல் இடுவாருண்டோ?” என்று கடிந்து முகம் கொடாதேயிருந்தார் நம்பிகள். கோவிந்தப்பெருமாளும் திருமாளிகை வாசலில் தண்டனிட்டு காஞ்சிக்கு திரும்பி உடையவரை தண்டனிட்டு நின்றார். உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல, எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக்கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அனைத்துக்கொள்ளீர்!என்று வாரி அணைத்துக்கொண்டார்.

Ref: குரு பரம்பரை வைபவம்; யதிராஜ ராமானுஜ தாசர், ஆழ்வார்கள் அமுத நிலையம், ௧௯௮௭