புதன், 10 அக்டோபர், 2012

நஞ்சீயரின் ஆசார்ய நிஷ்டை

ஒருமுறை நஞ்சீயர் பட்டரின் பல்லக்கை தூக்கப் புக, ஸந்நியாஸியான அவர்க்கு அது தகாதெனப் பட்டர் தடுக்க, ஆசார்ய கைங்கர்யத்துக்கு இடைஞ்சலாக வர்ணாஸ்ரம தர்மமான ஸந்யாஸம் இருக்குமானால் அதை விட்டு விடுகிறேன் என்று கூறி அதன் மூலம் ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதமான வர்ணாஸ்ரம தர்மம் விடத்தக்கது என்பதை எடுத்துக் காட்டினார். மேலும், நந்தவனம் அமைத்து அதன் பூக்கள் பட்டர் குடும்பத்துக்கு போக மீதமுள்ளது தான் பெருமாளுக்கு என்று சொல்லி ஆசார்யனுக்காகத்தான் பகவத் கைங்கர்யம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பட்டர் நஞ்சீயருடன் சேதுஸ்நாநம் செய்து திரும்புகையில் பாதிரி என்னும் க்ராமத்தில் பொழுது சாய்ந்தமையால் ஒரு வேடன் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று. வேடன் அவர்க்கு ஒரு கட்டில் தந்து அமரச் செய்தான். அதை பட்டர், “நம்மை ஒன்றும் அறியாதான் தன் வாசலுக்கு வந்ததொன்றே காரணமாக இதுசெய்தானே! ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என்ன நினைத்திருப்பானோ!என்று எண்ணினார். மேலும் வேடனிடம் ஏதும் விஷயமுண்டா? என்றார். அவனும் வேட்டையில் முயல் குட்டியைப் பிடித்தேன்; அதன் தாய் என் முன்னே வந்து கும்பிட்டுக் கிடந்தது; அது கண்டு மனம் நெகிழ்ந்து குட்டி முயலை விட்டு விட்டேன்என்றான். பட்டர் நஞ்சீயரைப் பார்த்து, “முயலுக்கு சரணாகதியை கற்றுத் தந்தவரார்! வேடனுக்கு சரணாகத ரக்ஷணத்தை உபதேசித்தவரார்! அறியாமலேயே சரணாகதி பலன் தருவதே! இதுவும் ஒரு பிரமாணம் அன்றோ! என்றருளினார்.

வீரசுந்தர ப்ரஹ்ம்மராயன் கூரத்தாழ்வானுடைய சிஷ்யன். அவன் பெருமாளுக்கு மதிள் கட்டினான். இடையில் பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகை குறுக்கிட்டதால் திருமாளிகையை இடிக்கவேண்டும் என்றான். பட்டர், “பெருமாளுக்கு மதிளல்ல ரக்ஷகம்; அவருடைய மங்களாசாசனமே ரக்ஷகம்; அதனால் திருமாளிகையை அப்படியே விட்டு மதிலை ஒதுக்கிக் கட்டுஎன்றார். அவன் கேளாமல் மாளிகையை இடித்து மதிளை நேராகக் கட்டினான். இது காரணமாக ஆசார்யரின் குமாரர் என்றும் பாராமல் பட்டருக்கு பல உபத்ரவங்கள் தந்தான். அதனால் பட்டர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளினார். வழியில் களைத்துப்போய் நஞ்சீயரை இன்னும் காணோமே என நினைக்க, நஞ்சீயரும்ஸ்வாமி, ஸ்வாமிஎன அழைத்துக் கொண்டு ஆஹாரம் கொண்டுவர, பட்டர் மிகவும் உகந்து நஞ்சீயரை குளிர நோக்கினார். ஆசார்யனை தொடர்ந்து நிற்பது ஆசார்யரின் கிருபையை உண்டாக்கும் என்பது இந்த நிகழ்வு மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது .

Ref: குரு பரம்பரை வைபவம்யதிராஜ ராமானுஜ தாசர்ஆழ்வார்கள் அமுத நிலையம்௧௯௮௭