வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கூரத்தாழ்வான் அனுபவித்த கண்ணன் - I

இந்த இடுகை தொடர்ந்து மேல் வரும் இடுகைகளில் கூரத்தாழ்வான், பட்டர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் ஆகிய ஆசார்யர்கள் அனுபவித்த கண்ணனை சற்று விரிவாக பார்க்கலாம். அந்த வரிசையில் இன்று கூரத்தாழ்வான் அனுபவித்த கண்ணன் - 1.

பஞ்சஸ்தவத்தில் முதல் ஸ்தவமான ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்திலும் முடிவு ஸ்தவமான ஸ்ரீஸ்தவத்திலும் தவிர, அதிமாநுஷஸ்தவம், சுந்தரபாஹுஸ்தவம், வரதராஜஸ்தவம் என்கிற மற்றை மூன்று ஸ்தவங்களிலும் ஸ்ரீகிருஷ்ணாவதார குண சேஷ்டிதாநுபவம் மிக மேம்பட்டுள்ளது. 

அதிமாநுஷஸ்தவத்தில் முப்பத்து மூன்று ஸ்லோகமளவும் நரசிம்ஹ, திருவிக்கிரம, ராமாவதாரங்களை அநுபவித்துப் போந்தார். முப்பத்து நான்காம் ஸ்லோகம் முதல் ஸ்தவம் முடியும் வரை (இருபத்தைந்து ஸ்லோகங்களில்) க்ருஷ்ணாவதாரமே அற்புதமாக உள்ளது.  அவற்றிலிருந்து சில திவலைகள்: 

ஸா பூதனா சகடம் (34) 
இந்த ஸ்லோகத்தின் மூலம் யசோதை பிராட்டியைப் போல் வேஷம் பூண்டு நள்ளிரவில் நந்தகோபர் திருமாளிகையிலே புகுந்த பூதனையிடம் பகவானான குழந்தை பாலுண்ணும் பாவனையில் அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இருக்கப் பிடித்து அவள் உயிரையும் உறிஞ்சி முடித்திட்டான் என்ற கதையையும், வீட்டு வாசலில் வைத்திருந்த சகடத்தின் மேல் ஒரு அசுரன் ஆவேசித்து, ஏணையில் சயனித்திருந்த கண்ணன் மேல் பாய்ந்து நலியப்புக, தன் திருவடிகளால் எம்பெருமான் அவனை உதைத்தருள, அந்தச் சகடம் முறிந்து அசுரனும் அழிந்தான் என்பதான மற்றொரு கதையையும் ஆழ்வான் அனுபவிக்கிறார். 

பச்யத்ஸு ஸூரிஷு ஸதா (35) 
கண்ணன் ஸ்ரிய: பதியாய் நித்யஸூரி ஸேவ்யனாய், யோகித்யேயனாய் இருக்கிறவனுக்கு நவநீதசௌர்யம் என்கிற இந்தக் களவுத் தொழில் எதற்காக? உபய விபூதியையும் தன் சொந்தமாகக் கொண்ட நிர்வாஹன், யோகிகளுக்கும் எட்டாத தொலைவில் உள்ள நித்யஸூரிகளின் தலைவன், ஆயர்மனைகளிலே புகுந்து வெண்ணை திருடியது பொருத்தமாக இல்லையே என்கிறார் ஆழ்வான். 

ஸத்யேவ கவ்யநிவஹே (38) 
இந்தப் பாட்டில், அம்பரம், தண்ணீர், சோறு முதலானவைகளை ஆறம் செய்யும் செல்வந்தரான நந்தகோபரின் திருமாளிகையிலே பிறந்துவைத்து, "வைத்த நெய்யுர், காய்ந்த பாலும், வடிதயிரும் நறு வெண்ணையும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை" என்று யசோதை பிராட்டி சொல்லும்படி வெண்ணை, தயிர், பால், நெய்களுக்கு குறையுண்டாய்ப் பிறர் வீடு சென்று களவாட வேணுமா? என்று ஆழ்வான் வினவுகிறார். 

யந்நாம நாத! நவநீதம் (39) 
ஒரு நாள் கண்ணன் வெண்ணை களவு செய்வதற்கு முன் உடையவர்கள் வருகின்ற சுவடறிந்து, கையிலும், வாயிலும் வெண்ணை இருந்தால் அல்லவா மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, அவ்வெண்ணையை உடம்பெல்லாம் பூசிக்கொண்டார். அவருடைய இந்த வெகுளித்தனத்தை கூரத்தாழ்வான் இந்த ஸ்லோகத்தில் ரசிக்கிறார். 

நாளை சுந்தரபாஹுஸ்தவத்தில் கூரத்தாழ்வான் கண்ணனை எப்படி அனுபவிக்கிறார் என்று பார்ப்போம்.