செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அநுபவித்த கண்ணன்

அஷ்டப்ரபந்தம் பாடிய பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது ப்ரபந்தங்களில் ஆழ்வார்களைப் போலவே கிருஷ்ணாவதார சேஷ்டிதங்களை அற்புதமாக அனுபவித்துள்ளார்.

இவர் அருளிச்செய்த திருவரங்கத்து மாலைஎன்னும் ப்ரபந்தமொன்றில் 25 செய்யுட்களில் கிருஷ்ணாவதார அனுபவத்தை வகைவகையாகச் செய்து போந்துள்ளார். அவற்றிலிருந்து சில திவலைகள்: 

1) திருவரங்கத்து மாலை தலைகட்டும் செய்யுளில் கிருஷ்ணாவதார ரஹஸ்யமான அபூர்வ வரலாறு ஒன்றை ஐயங்கார் தெரிவிக்கிறார்:

பொறுங்கேதனப்படை மன்னரை மாய்த்துப் புவிமடந்தை
பெருங்கேத நீக்கி நடந்தது மீளப் பிறங்குபுள்ளின்
வருங்கேசவன் சக்ரமாயோ னரங்கன் வரவிடுத்த
கருங்கேசமொன்று தன்னிச்சையிலே செய்த காரியமே


அதாவது, அசுரர்கள் மலிந்ததனால் உண்டான பாரத்தை பொருக்க முடியாத பூமிதேவி மிகவும் துன்பமுற்றாளாம். அப்பொழுது நான்முகக் கடவுளும் மற்றை தேவர்களும் நாராயணனை துதித்து வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எம்பெருமான் தனது திருமேனியில் இருந்து வெண்மையும், கருமையுமான மயிர்கள்போல் காணப்பட்ட தேஜஸ்ஸுக்களை எடுத்து, இந்த தேஜஸ்ஸுக்கள் மண்ணில் தோன்றி பூமிக்கு உண்டாகிற பாரத்தை தீர்க்கும் என்று நியமித்தார். அவைகள் ராம-கிருஷ்ணனாக அவதாரம் செய்து, கொடிய அசுரர்களை சம்ஹரித்து, பூமியின் பாரம் நீங்க வழி செய்ததாக சொல்லப்படும் புராணத்தை ஐயங்கார் மேற்கூறப்பட்ட செய்யுளில் அருளிச்செய்கிறார். 

2) திருவாய்ப்பாடியில் கண்ணன் ஆயர்மனைகளுக்குச் சென்று வெண்ணை களவு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு ஆய்ச்சி அவனை பிடித்து உரலோடு கட்டி வைத்துவிட்டு தன் பிள்ளையை இடுப்பிலே சுமந்துக்கொண்டு யசோதை பிராட்டியிடம் முறையிட சென்றாளாம். யசோதாய்! உன் மகனின் செய்தியை என் வீடு வந்துப் பார்என்று அவள் வாய்திறக்கும் முன் கண்ணபிரான் தன் மாயையினால் அந்த ஆய்ச்சியின் மடியில் உள்ள பிள்ளையாகவும், அவளுடைய வீட்டில் கட்டுண்டு இருக்கும் பிள்ளை அவளுடையதாகவும் ஆகிவிட்டதாம். இந்த நிகழ்வை வர்ணிக்கும் ஐயங்காரின் செய்யுள் கீழ்வருமாறு: 

உன்னைக் களவி லூலோடு கட்டிவைத் தன்னுடைய
அன்னைக் கொருததி யரிவித்தபோது, அலையாழிமங்கை
தன்னைப் புணர்ந்தருள் தாரரங்கா! அவள் தன் மருங்கில்
பின்னிக் கொடுசென்ற பிள்ளை மற்றாரென்று பேசுகவே
!


3) கண்ணன் பால் முதலியவற்றைக் களவு செய்ததற்காக ஓர் இடைச்சி பெரியதொரு மத்தைக்கொண்டு அடித்தாளாம்; அப்பொழுது அவனது திருவயிற்றினுள் அசையாது வைத்து அவனால் பாதுகாக்கப்பட்டிருந்த ஸகல லோகங்களும், அவற்றிலுள்ள சராசரங்கள் யாவும் அடிப்பட்டன வென்கிறார் ஐயங்கார். இதை கூறும் செய்யுள் யாதெனில்:

“..காளியன்மேல் நடிக்கும் பெரியபெருமாளரங்கர் நறைகமழ்பால்
குடிக்குங் களவுக்கு மாறுகொண்டே யொருகோபிபற்றி

அடிக்கும் பொழுதிற் பதினாலுலகு மடிபட்டவே