செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பராசர பட்டர் அநுபவித்த கண்ணன்

பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீரங்கநாதனை அநுபவிக்கும் இடத்தில் தமக்குள்ள ஸ்ரீகிருஷ்ண ப்ராவண்யம் தோற்றும் வகை அநுபவித்ததை சற்று விரிவாக பார்ப்போம்.

ஸ்ரீரங்கராஜஸ்தவம் பூர்வ சதகத்தில் பட்டர் ஸ்ரீ ரங்கநாதனை திருமுடி தொடங்கி திருவடி அளவும் வர்ணித்து வருகையில், திருமார்பு வர்ணனையில் வக்ஷஸ் ஸ்தல்யாம் துளசி கமலா கௌஸ்துபைர் வைஜயந்தி ஸர்வேசத்வம் கதயதிகராம் ரங்கதாம்நஸ் ததாஸ்தாம்என்கிறார்.

இப்படி பெரிய பெருமாளுடைய திருமார்பில் பரத்வ, சௌலப்யங்கள் இரண்டையும் அநுபவிக்கிற பட்டரின் அழகு ஆச்சர்யமானது.

பெரிய பெருமாளின் திருமார்பில் பிராட்டி, கௌஸ்துபம், வனமாலை போன்ற பூஷணங்களுடன் யசோதை பிராட்டி சாற்றிய புலிநகம், ஆமைநகம், பஞ்சாயுதஹாரம் போன்ற ஆபரணங்களும் கூடியிருந்து எம்பெருமானின் சௌலப்யத்தை விளங்கச் செய்வதனால் இவையே தம்முடைய த்யானத்தில் தலைசிறந்து நிற்பதாக பட்டர் அருளிச்செய்கிறார்.

அதே போல், பெரிய பெருமாளின் திருவடிகளை வர்ணிக்கையில் யந் ப்ருந்தாவநபண்டிதம்என்று தொடங்கி திருவடிக்கு விசேஷனம் இடும் இடத்தில்இந்த பெரிய பெருமாளின் திருவடிகள் ப்ருந்தாவநத்திலே யமுனைக்கரையில் உலாவினவைஎன்று அருளிச்செய்கிறார்.

மேற்கொண்டு, பட்டர்ததிரவைர் யத்தாண்டவம் சிக்ஷிதம்என்னும் இடத்தில் கண்ணபிரான் தாண்டவம் ஆட எங்கே சிக்ஷை பெற்றார் என்று வினவி, ஆய்ச்சிகளின் தயிர்கடையும் ஓசையினால் சிக்ஷிக்கபெற்றார் என்று ஸமாதானம் கூறி, அவ்வாறு சிக்ஷிக்கப்பட்ட தாண்டவமுடையது ஸ்ரீ ரங்கநாதனின் திருவடிகள் என்றும் சாதிக்கிறார்.

உத்தர சதகம் ஆகண்டவாரிபரமந்த்ரஎன்று தொடங்கும் ஸ்லோகத்தில் தேவகி பிராட்டிபிள்ளைமையின்பத்தை இழந்த பாவியேன்என்னும்படியான துர்பாக்யசாலியாக இருப்பினும் அவளுக்கு ஒரு நிகரற்ற சௌபாக்யமுண்டு என்று அருளிச்செய்கிறார்.

அதாவது, “கழுத்தே கட்டளையாக நீரைப்ப்பருகின காளமேகம்போன்றும், “பீதகவாடை உடுத்தும் செந்தாமரைக் கண்ணனாகவும்”, “அழகிய ஐம்படை அணிந்தசாக்ஷாத் பரப்ரஹ்ம்ம ஸ்வரூபியான ஸ்ரீ கிருஷ்ணகிஷோரனை பிள்ளையாக பெற்ற அவளது பாக்கியமே பாக்கியம் என்று அருளிச்செய்கிறார்.

மேலும்சைலோக்நிச் ச ஜலாம்பபூவஎன்கின்ற ஸ்லோகத்தின் மூலம் கோவலனாக அவதரித்து, குழலூதி, அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்ட கண்ணனே தம்மால் தற்போது அநுபவிக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதன் என்று விளிக்கிறார்.

நாளை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அநுபவித்த கண்ணனுடன் இந்த தொடர் முடிவுறும்.