வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பாவமே செய்து பாவியானேன்

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி முதற் பத்து ஒன்பதாம் திருமொழியில் "பாவமே செய்து பாவியானேன்" என்று சாதிக்கிறார்.

அது என்ன பாவமே செய்து பாவியாவது? பாவம் செய்து புண்ணியனாக முடியுமா என்ன? இல்லை புண்ணியம் தான் செய்து பாபியாக முடியுமா?

இங்கு பெரியவாச்சான் பிள்ளை மிக அருமையாக த்ருஷ்டாந்த்தம் காட்டுகிறார்:

பாவம் செய்து புண்யாத்மாவாக ஆவதும் உண்டு, புண்யம் செய்து பாபிஷ்டனாக ஆவதும் உண்டு.

எப்படி?

தசரத சக்கரவர்த்தி, அஸத்ய வசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்ன வண்ணம் செய்கையாகிற புண்ணியத்தை பண்ணிவைத்தும், சாக்ஷாத் வடிவமெடுத்து வந்த புண்ணியனான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றதால் அவனுடைய புண்ணியம் பாபமாகவே ஆயிற்று.

பாபிகளில் முதலான சிசுபாலன் உள்ளதனையும் பாவமே செய்த போதிலும் முடிவில் நல்ல பேறுபெற்றான் அதனால் அவனுடைய பாபமெல்லாம் புண்ணியமாகவே ஆயிற்று.

ஆகவே, பாவம் செய்து புண்ணியசாலி ஆவதும், புண்ணியம் செய்து பாபிஷ்டன் ஆவதும் சாத்தியம் என்பதால் ஆழ்வார் "பாவமே செய்து பாவியானேன்" என்று சாதிக்கிறார்.

அதாவது யான் தசரதனைப் போல் புண்ணியம் செய்து பாவி ஆனவன் அல்லேன். சிசுபாலனைப் போல் பாவம் செய்து புண்ணியன் ஆனவனும் அல்லேன். செய்ததும் பாவம், ஆனதும் பாபிஷ்டனாக என்று சாதிக்கிறார்.