ஞாயிறு, 13 மே, 2012

நாலாயிரத்தில் எம்பெருமானின் கல்யாண குணங்கள் - 1

எம்பெருமானுக்கு அநேக கல்யாண குணங்கள் உண்டு என்பது எம்பெருமானார் தரிசனத்தின் முக்கியமான வாதம். இன்று எம்பெருமானின் மூன்று கல்யாண குணங்களை பற்றி சற்று விரிவாக பார்த்து மகிழ்வோம்:

காருண்யம்:
திருப்பாவை "ஆழி மழைக் கண்ணா" பாசுரத்தில், “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துஎன்று ஆண்டாள் அருளிச்செய்கிறாள். ஊழி முதல்வன் = ஜகத் காரண பூதன் = உலகை ச்ருஷ்டித்த பற்பநாபன்.

ஏன் பற்பநாபானின் திருமேனி நிறம் போல் மெய்கருக்க வேண்டும்? ஏன் இராமனின் திருமேனி நிறம் கொள்ளக் கூடாது? ஏன் கண்ணனின் திருமேனி நிறம் கொள்ளக் கூடாது?

இந்த உலகத்தை படைக்கும் பற்பநாபனானவன் அளவில்லாத காருண்யத்தின் இருப்பிடம். அதாவது, நாம் செய்யும் பாவங்களை எல்லாம் சகித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் இந்த உலகத்தை படைத்து நாம் உய்ய இன்னொரு வாய்ப்பளிக்கும் கருணைக் கடல் அல்லவோ அவன்? அவன் காருண்யத்துக்கு முன் ஒப்பொருவர் இல்லை. அளவுக்கு அதிகமாக காருண்யம் உடையவன் ஆதலால் அவன் திருமேனி கருமை நிறத்தை கொண்டதாக அமைகிறது. மழை தரும் கார்முகில்கள் மழை தந்தபின் வெண்ணிறமாக மாறி விடும். ஆனால், பற்பநாபன் இடையே காருண்யத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதே இல்லை. அவன் காருண்யத்துக்கு யாரும் ஈடாகமுடியாது என்பதால் ஆண்டாள் மழை முகில்களிடம் பற்பானாபனின் நிறத்தையாவது கொள்ளுங்கள் என்று சாதிக்கிறாள்.

தாமோதரத்வம்/சௌலப்யம்:
எம்பெருமானின் சௌலப்ய குணத்தை புரிந்துக்கொள்ள திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தின் விளக்கத்தைப் பார்ப்போம். இந்த பாசுரத்தின் முதற் வார்த்தையான மாயன்தான் இங்கு முக்கியமானச் சொல். நான்காம் பாசுரத்தில் பார்த்த பற்பநாபனுக்கும், இந்த பாசுரத்தில் நாம் பார்கவிருக்க தாமோதரனுக்கும் இந்தச் சொல் பாலமாக அமைகிறது. பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன். அதாவது, ஜகத்காரகனான பற்பநாபன் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன். ஐம்புலன்களால் அனுமானிக்க (உணர) முடியாதவன். நம்மையும் சேர்த்து இந்த பிரபஞ்சத்தை ச்ருஷ்டிக்கும் அவன் சௌலப்யன் (அனுகமுடிந்தவன்) அல்லன். உயர்ந்த கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ளவன். நம்மாழ்வார் கூறுவது போல் உயர்வற உயர் நலம் உடையவன். ஆனால், நமக்கு நடுவே இராமனாக, கண்ணனாக அவதரித்துப் போந்து, ஒரு சராசரி ஜிவாத்மாவைப் போல் இன்னல்களை அனுபவித்தவனும் அதே நாராயணன். தான் செய்த குரும்புகளுக்காக தாம்புக் கயிற்றால் வயிற்றை சுற்றி கட்டப்பட்டவன் கண்ணன். தன் தந்தையின் வார்த்தைக்கு அடிபனிந்து பதிநான்கு வருடம் வனவாசியாய் பல இன்னல்களை அனுபவித்தவன் இராமன். ஒரு பாகவதனுக்கு (யசோதை, தசரதன்) அடிபணிந்து எம்பெருமான் செயல்படுவது அவனின் தாமோதரத்வத்தை (எளிதாக அனுகக்கூடியவனாக இருக்கும் தன்மையை, சௌலப்யத்தை ) காட்டுகிறது.

மார்தவம்:
எம்பெருமானின் மார்தவ குணத்தை எடுத்துக்காட்ட மலை நாட்டு திவ்ய தேசமான திருமூழிக்களம் எம்பெருமானை பற்றி திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி பாசுரத்தை பார்போம். ஆழ்வார், இத்தல பெருமாளை பின்னாணார் வணங்கும் சோதிஎன்று குறிப்பிடுகிறார். அதாவது, எம்பெருமானின் விபவ அவாதாரங்களை (இராம, கிருஷ்ண அவதாரங்களை) காணப்பெறாத நம்மை பின்னாணார்என்று விசேஷித்து, நம்முடைய இக்குறையை தீர்க்கவே எம்பெருமான் இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது ஆழ்வார் வாக்கு. இத்தல பெருமாளுக்கு மார்தவம்என்ற குணம் மேலோங்கி இருக்கிறது. மார்தவம் என்பது தன்னை சார்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிவதை சஹிக்கமுடியாத ஒரு தன்மை. அவன் சம்பந்தத்தை நாமிழந்து துன்புறுவதை பார்த்து சஹியாத எம்பெருமான், நமக்காக ஆச்ரித பரதந்திரனாய், திருமூழிக்களத்தில் கோவில் கொண்டுள்ளான். இத்தலத்து பெருமாளை தரிசிக்கும் போது அவருக்கருகே நாம் சில நொடிகள் கழிப்பது போன்றொரு உணர்வு பிறக்கும்.