வெள்ளி, 11 மே, 2012

திருமாலை - பாசுர அனுபவம்


தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருமாலை ப்ரபந்தத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாசுரத்தின் அனுபவம்:

திருமாலை பாசுரங்கள் எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் ஸம்வாதம் நடப்பதைப் போல் அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாசுரத்தில் ஆழ்வார் "ஒ அழகிய மணவாளனே! இந்த பூலோகத்தில் இருந்துகொண்டே உனது நாமங்களை சொல்லி அனுபவிக்கும் இன்பம் அடியேனுக்கு ப்ராப்தமாக வேண்டும்" என்று வேண்டிக்கொள்கிறார். இவ்வனுபவத்தைவிட நீ எனக்கு உயர்ந்த அந்தஸ்தான பரமபதத்தை கொடுத்தாலும் அது எனக்கு வேண்டாம் என்று சாதிக்கிறார். திருமங்கை ஆழ்வார் தனது திருமடலில் இதே கருத்தை முன்மொழிகிறார். திருமங்கை ஆழ்வார், பரமபத பதார்த்தம் என்ற ஒன்றே கிடையாதென்றும், சாஸ்திர மரியாதைக்காக அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அவ்வனுபவம் சுவையற்றதாகவே இருக்கும் என்றும் சாதிக்கிறார். ஆக, இந்தப் பாசுரம் மூலம், பூலோகத்தில் இருந்து, எம்பெருமானின் அர்ச்சாவதாரத்தை சேவித்தபடி, நாம சங்கீர்த்தனம் செய்வதினால் விளையும் அனுபவம், பரமபத அனுபவத்தைக் காட்டிலும் மேலோங்கியிருக்கும் என்கிற அர்த்தம் விளங்குகிறது.

திருமாலை மூன்றாம் பாட்டில், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு ஸம்ஸாரத்தில் இருப்பு வேண்டாம் என்று அருளிச்செய்கிறார். வேத நூல்கள் கூறியப்படி ஒரு மனிதனுக்கு நூறு வருடங்கள் ஆயுள் இருப்பினும், அதில் பாதி வருடங்கள் உறங்கியே கழிக்கப்படுகிறது என்றும், மீதமுள்ள ஆயுள் சிசுவாக இருக்கும் அவஸ்தையிலும், பாலகனாக விளையாட்டு பருவத்திலும், யௌவனத்தில் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு பாபசெயல்கள் புரியும் அவஸ்தையிலும் கழிந்துவிடுகிறபடியால், நாம சங்கீர்த்தனம் செய்ய நேரமில்லாமல் போய்விடுகிறது என்று வருந்துகிறார். இதற்கு எம்பெருமான்: "ஆழ்வீர், எனக்கிருப்பதோ இரண்டு விபூதிகளான பரமபதமும், ஸம்ஸாரமும். இவ்விரண்டும் வேண்டாம் என்றால் உமக்கு வேறென்ன தான் வேண்டும்?" என்று வினவ அதற்கு ஆழ்வார் "மேற்படி கூறப்பட்டுள்ள இரண்டு விபூதிகளுக்கும் அப்பாற்பட்டு மூன்றாவது விபூதி எனும்படியான உமது கோவிலிலே அடியேனுக்கு ஒரு இருப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டார். 

அதாவது, பேதை பருவத்திலே அன்னப்ராசனத்திற்காவது (சௌளம்)  சன்னதிக்குள் புகுகின்ற வாய்ப்பு பிறக்குமென்றும், பாலக பருவத்திலே பெருமாள் புறப்பாடு போன்றவை அனுகரிக்கும்படியாய் இருக்குமென்றும், யௌவனத்தில் தான் விரும்புகிற விஷயாந்தரங்களை காணவேண்டியாகிலும், சன்னதிக்குள்ளே புகலாயிருப்போம் என்றும், வயது முதிர்ந்து தள்ளாடும் காலத்திலும் எம்பெருமான் நம் வாசலிலே வந்து நிற்கலாயிருக்கும் என்றும் சாதிக்கிறார். இவ்வாறு கோவில் வாஸம் செய்தால், நாம் கனவிலும் எம்பெருமானின் வடிவழகையே நினைத்திருப்போம் என்பதினால் தனக்கு கோவிலிலே நித்யவாஸம் பண்ண சஹகரிக்குமாறு எம்பெருமானுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.