செவ்வாய், 20 மார்ச், 2012

மலையாள நாட்டு திவ்ய தேசங்கள் - Travel Planner


சென்னையிலிருந்து தினமும் இரவு 8:25 மணி அளவில் புறப்படும் "மங்களூரு மெயில்" என்கின்ற ரயிலை பிடிக்கவும்.

முதல் நாள்:
அதிகாலை 6 மணி அளவில் மங்களூரு மெயில் பட்டாம்பி (பாலக்காடு ஜில்லா) என்கின்ற ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். அங்கே இறங்கிக் கொள்ளவும். ரயிலடியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "திருவித்துவக்கோடு" என்கின்ற திவ்ய தேசம் அமைந்துள்ளது. கேரள வாசிகள் இந்த திவ்ய தேசத்தை "திருமிட்டகோடு" என்று அழைப்பார்கள். இந்த திவ்ய தேசத்தை ஒட்டி பாரத்தப்புழை என்கின்ற நதி ஓடுகிறது. அங்கே ஸ்நானம் செய்து கொள்வதற்கு வசதி உண்டு. சிறிய ஊர் என்பதால் தங்கும் வசதி, சத்திர வசதி எல்லாம் இருப்பதைப் போல் தெரியவில்லை.

திருவித்துவக்கோட்டில் சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருநாவாய் என்கின்ற திவ்ய தேசத்துக்கு செல்லலாம். இந்த திவ்ய தேசம் திருவித்துவக்கோடில் இருந்து ஒரு 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருநாவாய்க்கு குட்டிப்புரம் என்கின்ற ஊர் மார்கமாக செல்ல வேண்டும். திருநாவாய் பித்ரு கர்மங்களுக்கு பெயர் போன ஸ்தலம் என்பதால் தங்கும் வசதி, குளியல் -கழிப்பறை வசதி எல்லாம் உண்டு. திருவரங்கூர் தேவஸ்வோம் போர்டு என்கின்ற அறக்கட்டளை திருநாவாயில் ஒரு சத்திரம் நடத்துகிறது. அங்கே தங்கி இளைப்பாறிக் கொள்ளலாம். ஒரு பதினோரு மணி அளவில் அனைத்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்து விடும். அதற்கு பிறகு சாயங்காலம் 5 மணிக்கு மேல் தான் சேவை தொடங்கும். எனவே முதல் நாள் காலையில் இவ்விரண்டு திவ்ய தேசங்களையும் தரிசித்து விடுதல் உத்தமம்.

திருநாவாயிலிருந்து குட்டிப்புரம் மார்கமாக குருவாயூர் சென்று அன்றிரவுக்குள் அங்கு தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். குருவாயூர் திருநாவாயிலிருந்து 47 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த ஸ்தலம் திவ்ய தேசமாக இல்லாவிட்டாலும் புராணங்களில் பாடப்பட்டிருக்கும் ஸ்தலமாக விளங்குவதால் அங்கேயும் தரிசனம் செய்துக் கொள்ளலாம். ஒரு ஐந்து மணி அளவில் குருவாயூர் சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருச்சூர் வந்து இரவு தங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டாம் நாள்:
திருச்சுரிலிருந்து விடியற்காலையிலேயே புறப்பட்டு விடுங்கள். முதலில் செல்ல வேண்டிய ஸ்தலம் திருமூழிக்களம். கேரளவாசிகள் மூழிக்குளம்என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். திருச்சூரிலிருந்து சுமார் 50 கி.மீ. யாத்திரை செய்தால் அங்கமாலி ரயிலடிக்கு வந்துவிடலாம். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூழிக்குளம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. ஸ்நானம் செய்ய வேண்டியவர்கள் கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை நதியில் செய்து கொள்ளலாம். திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோ, குளியல் -கழிப்பறை வசதிகளோ கிடையாது.

திருமூழிக்களம் சேவை முடித்துக் கொண்டு மலா என்கின்ற ஊர் மார்கமாக குலசேகர அழ்வார் அவதார ஸ்தலமான திருவஞ்சிக்களம் செல்லுங்கள். இந்த ஸ்தலம் TKS புரம் என்று அழைக்கப்படுகிறது. மலாவிலிருந்து TKS புரத்துக்கு கொடுங்கல்லூர் தாண்டி செல்ல வண்டும். அங்கே ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஆழ்வார் சேவை ஆன பிறகு வந்த வழியிலேயே திரும்பி ஆலுவா (Alwaye) வந்தடையுங்கள். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் (CUSAT) அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை நோக்கி சென்றடையலாம். இத்தலத்தை த்ரிக்காக்கராஎன்னும் வாமன க்ஷேத்ரம்என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. பதினோரு மணிக்கு முன் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். இது சாத்தியமில்லை எனில் சௌகரியம் கருதி TKS புரம் பயணத்தை கைவிட்டுவிடலாம்.

அலுவாவிலிருந்து 82 கி.மீ. தூரத்தில் இருப்பது கோட்டயம். கோட்டயத்திலிருந்து 20 கீ.மீ. தூரத்தில் இருப்பது சங்கனாச்சேரி. அங்கிருந்து திருக்கடித்தானம் என்கின்ற திவ்ய தேசத்துக்கு செல்லுங்கள். மாலை 5 மணிக்கு கோவில் திறந்த உடன் தரிசனம் முடித்துக்கொண்டு கோட்டயம் திரும்பி விடுங்கள். அல்லது திருவல்லா கோவிலுக்கு எதிரே உள்ள அரசு கெஸ்ட் ஹாவுசில் இடம் கிடைத்தால் (தொ. எண் : 0469-2621321) இரவு உறக்கத்திற்கு கோட்டயம் திரும்ப செல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்றாம் நாள்:
அதிகாலை எழுந்தவுடன் அடுத்த திவ்ய தேசமான திருவல்லவாழ் (திருவல்லா வல்லப க்ஷேத்ரம்) திவ்ய தேசம் சென்றடையுங்கள். இந்த ஸ்தலம் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடபெற்ற ஸ்தலமாகும்.திருவல்லவாழ் தொடங்கி திருவண்வண்டூர், திருசிட்டாறு (செங்கன்னூர், திருசெங்குன்றுர் என்றும் அழைப்பதுண்டு), திருப்புலியூர் மற்றும் திருவாரன்விளை என்கின்ற திவ்ய தேசங்களுக்கு அடியேன் மேற்கூறிய அதே அடையில் (order) சென்று தரிசியுங்கள். மதியம் 12 மணிப்போல் அனைத்து திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்துவிடும். செங்கன்னூர் (அ) திருவல்லாவுக்கு திரும்ப வந்து இளைப்பாறிக்கொள்ளலாம்.

செங்கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் 165 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நோக்கி பயணம் செய்து அங்கேயே இரவு தங்கிக்கொள்ளவும்.

நான்காம் நாள்:
திருவனந்தபுரம் கோவில் அதிகாலை 5 மணிக்கே திறந்துவிடும். அதனால் சீக்கிரம் எழுந்து தரிசித்தல் உத்தமம். 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரை திருவரங்கூர் சமஸ்தானத்தின் ராஜா ப்ரத்யேகமாக தரிசிப்பார் என்பதால் நமக்கு சேவை கிடைக்காது. எனவே அதற்கு முன்னரே சேவித்து விட்டால் உத்தமம்.

அநந்த பத்மநாப ஸ்வாமி சேவை ஆன பிறகு மார்த்தாண்டம் நோக்கி செல்லுங்கள். இது ஒரு 50 கி.மீ. யாத்திரை. மார்த்தாண்டத்தில் வந்திறங்கிக்கொண்டு அங்கிருந்து திருவாட்டாறு நோக்கி பயணியுங்கள். ஆதிகேசவ பெருமாள் திருத்தலத்துக்கு செல்ல டவுன் பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் கிடைக்கும். பன்னிரண்டு மணிக்கு முன்னரே அங்கேயும் சேவை முடிந்து விடும். சற்று இளைப்பாறிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி பயணியுங்கள். சாயங்காலம் 5 மணிக்கு தான் திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கோவில் திறக்கும். இந்த திவ்ய ஸ்தலம் நாகர்கோவிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு நாகர்கோவில் (அ) திருவனந்தபுரம் வந்து விடுங்கள். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கு மேல் ரயில்கள் கிடையாது. திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி சென்று தான் இரவு ரயிலை பிடிக்க வேண்டும். சென்னைக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் நாகர்கோவிலிலிருந்து நேரடியாகவே செல்லலாம்.