ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை நான்காம் பாசுரம்: ஆழிமழைக் கண்ணா

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை நான்காம் பாசுரம்: ஆழிமழைக் கண்ணா…..மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

ஓங்கி உலகளந்தபாசுரம் மூலம் ஆண்டாள் எப்படி திருமந்திரத்தின் அர்த்தத்தை உள்ளுரைப் பொருளாக தெரிவிக்கிறாள் என்று நேற்று பார்த்தோம். இன்று, “ஆழிமழைக் கண்ணாபாசுரம் மூலம் நாரணனின் பரத்வத்தை எப்படி விவரிக்கிறாள் என்று பார்க்கலாம்.

பாசுர அர்த்தம்:
ஓ மழை மேகங்களே! இடைவிடாமல் மழையாய் பொழியுங்கள்! சமுத்திரத்தில் இருக்கும் மொத்த நீர்த்துளிகளையும் ஆவியாகக் கொண்டு மேகங்கள் செய்து, இந்த உலகை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபனின் திருமேனி நிறம் போல் கார் வண்ணம் பூட்டிக்கொண்டு, இராமனின் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போல் இந்த தரணியை நனைப்பீர்களாக! திருமாலின் வலக்கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்தின் ஒளி போல் மின்னலுடன் மற்றும் அவரின் இடக்கையில் இருக்கும் சங்கின் கோஷம் போல் இடியோசையுடன் இப்புவியில் வசிப்போரின் வாழ்வைச் செம்மைப்படுத்த மழையாய் வாருங்கள்!

ஸ்வாபதேச அர்த்தம்:
வருண தேவர் ஒரு முறை பாகவத அடியார்களுக்கு சேவை புரிய எண்ணினார். ஆண்டாள், வருண தேவரிடம், பாகவத அடியார்களுக்கு பணிவடையாய் மார்கழி நோன்பின் போது இடைவிடாத மழையை பொழிய ஆணையிட்டாள். அதைத் தான் ஆழி மழைக் கண்ணா, ஒன்று நீகை கரவேல்என்று ஆண்டாள் சாதிக்கிறாள். சமுத்திரத்தின் அடிவரை சென்று (ஆழியுள் புக்கு) நீர்த்துளிகளை சப்தம் இட்டுக்கொண்டே ஆவியாக்கி (முகர்ந்துக்கொடு ஆர்த்தேறி), உலகத்தை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபனின் திருமேனி நிறம் போல் கருமை நிறங்கொண்டு (ஊழி முதல்வன் உருவன் போல் மெய்கருத்து), பற்பநாபன் வலக்கையில் இருக்கும் சுதர்சனரின் ஒளி போல் மின்னலுடன் (ஆழி போல் மின்னி) மற்றும் பற்பநாபனின் இடக்கையில் இருக்கும் வலம்புரி சங்கை போல் கோஷமிடும் இடியுடன் (வலம்புரி போல் நின்று அதிர்ந்து) இப்புவில் உள்ளோர் செழிப்போடு வாழ மழையாய் பெய்திட வாராய் என்று கோருகிறாள்.

இப்பாசுரத்தில், “பற்பநாபன் போல் நிறம் கொண்டுஎன்று எதுக்கு ஆண்டாள் சாதிக்கிறாள் என்ற சந்தேகம் எழலாம். ஏன் இராமன் போல் நிறம் கொள்ளக் கூடாது? ஏன் கண்ணன் போல் நிறம் கொள்ள கூடாது? இந்த உலகத்தை படைக்கும் பற்பநாபனானவன் அளவில்லாத காருண்யத்தின் இருப்பிடம். அதாவது, நாம் செய்யும் பாவங்களை எல்லாம் சகித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் இந்த உலகத்தை படைத்து நாம் உய்ய நமக்கு இன்னொரு வாய்ப்பளிக்கும் கருணைக் கடல் அல்லவோ அவன்? அவன் காருண்யத்துக்கு முன் ஒப்பொருவர் இல்லை. அளவுக்கு அதிகமாக காருண்யம் உடையவன் ஆதலால் அவன் திருமேனி கருமை நிறத்தை கொண்டதாக அமைகிறது. மழை தரும் கார் முகில்கள் மழை தந்தபின் வெண்ணிறமாக மாறி விடும். ஆனால், பற்பநாபன் இடையே காருண்யத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதே இல்லை. அவரின் காருண்யத்துக்கு மழை முகில்கள் ஒரு போதும் நிகர் ஆக முடியாது என்பதனால் குறைந்தபட்சமாக அவரின் திருமேனி நிறம் போல் வண்ணம் பெறுங்கள் என்று மழைமுகில்களுக்கு ஆண்டாள் கோரிக்கை விடுகிறாள்.

அகலமான அழகிய தோள்கள் கொண்டவன் பற்பநாபன் (பாழியம் தோளுடையவன்). இவ்வாறு ஜகத் காரண பூதனாக விளங்கும் பற்பநாபனை ஆழ்வார் உயர்வற உயரும் பெருந்திரலோன்என்று விசேஷிக்கிறார். அதாவது, நாம் எந்த அளவுக்கு நம் அறிவை உபயோகித்து அவனை புரிந்துக் கொள்ள முயல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் பிரயத்னம் வீணாகும். தன் அசாத்திய திறனால் தன் அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டே போகவல்லவன் பற்பநாபன். அப்பேற்பட்ட பற்பநாபனை அடைவது எளிதான விஷயம் அல்ல என்றபடியால் தான் இஜ்ஜகத்தில் அவதரித்து நம்முடன் வாழ்ந்த இராமனையும் கண்ணனையும் பற்றிக்கொள்ள அவசியம் ஏற்படுகிறது.

கூரத்தாழ்வார் நாபிக்கமலத்துடன் சேவை சாதிக்கும் பற்பநாபனின் திருக்கோலத்தை ரசிக்கிறார். எம்பெருமானின் திருமேனி சௌந்தர்யத்தை சிரஸில் இருக்கும் க்ரீடத்திலிருந்து அவர் திருப்பாதம் வரை ஓடும் ஒரு நதியாய் பாவிக்கிறார். சிரஸிலிருந்து தொடங்கும் சௌந்தர்ய நதியானது அவர் திருமார்பில் பட்டு அநேக நதிகளாக பிரிகின்றன. அவ்வாறு பிரிகின்ற நதிகள், எம்பெருமானின் நாபியில் சங்கமித்துக்கொண்டு ஒரு சுழற்சியை உண்டாக்குகின்றன. அவ்வாறு உண்டாகும் சுழற்சி ஏழு மடல் கொண்ட தாமரையாய் நாபியிலிருந்து உருவெடுக்கிறது. அத்தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரம்மனே (நான்முகனே) அவர் ஸ்ரிஷ்டித்த முதற் குழந்தையாக திகழ்கிறார்.

இந்த உலகத்துக்கு காரணகர்த்தா நாரணனே என்று அருமையான உதாராணம் கொண்டு கூரத்தாழ்வார் சாதிக்கிறார். இவ்வுலகில் தோன்றும் அனைத்து ஜீவன்களுக்குமே ஒரு விதை என்கின்ற மூலம் இருப்பது போல், இந்த உலகத்துக்கும் ஒரு விதை இருக்க வேண்டாமா? அந்த விதையைத்தான் தன் உதிரத்தில் (வயிற்றில்) பிரளய காலம் முடிந்த உடன் நாரணன் விதைக்கிறார். இதைத் தான் அமலனாதிபிரானில் திருப்பாணாழ்வார் அண்டரண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரைஎன்று சாதித்திருக்கிறார். அவ்வாறு விதைப்பட்ட விதையானது நாபி கமலமாய் முளை விட்டு உலகத்தின் தொடர்ச்சியை உணர்த்திக் காட்டுகிறது.

பிரளயகாலம் முடிந்து ஸ்ரிஷ்டிக்கு உரிய நேரம் (ஊழி) தோன்றும் போது, நாரணன் தன் படைப்பை தொடங்குகிறான். முதலில் பஞ்ச பூதங்களையும் பஞ்ச தன்மாத்திரங்களையும் படைக்கிறான். அதற்கு பிறகு பஞ்ச கல்மேந்திரியங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், மூலம், அஹங்காரம் மற்றும் ப்ரக்ருதியை படைக்கிறான். அதற்கு பிறகு தான் பிரம்மனையும் மற்ற சித்-அசித்களையும் படைக்கிறான். இவ்வாறு பற்பநாபனால் படைக்கப்படும் முன், இவை எல்லாமே அவனுள் ஒன்றாய் சூஷ்ம தசையில் வசித்து கொண்டிருக்கும். இவ்வுலகம் ஸ்ருஷ்டி ஆன பின்பு சித்-அசித்கள் ஸ்தூல தசையை அடைகின்றன. இவ்வாறு உலகை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபனே பரமன், அவனை மிஞ்சிய ஜகத்காரண கர்த்தா இன்னொருவர் இல்லை என்று திருமழிசை பிரான் நான்முகன் திருவந்தாதி முதற் பாசுரத்தில் சாதிக்கிறார்:நான்முகனை நாரணன் படைத்தான், நான்முகன் தன்முகானாய் சிவனைப் படைத்தான்”. இதே தத்துவமான நாராயண பரத்வத்தை இந்த பாசுரம் கொண்டு ஆண்டாள் நமக்கு விளக்குகிறாள்.

பாகவதர்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இப்பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டிக்கும் போது எம்பெருமான் எங்கிருந்தோ பொருள் கொண்டு வந்து ஸ்ரிஷ்டிப்பதில்லை. தன்னையே மூலப்பொருளாக கொண்டு தான் ஸ்ரிஷ்டிக்கிறார். எனவே, இவ்வுலகம் மற்றும் இவ்வுலகம் தாண்டி காணப்படும் சித்-அசித் அனைத்துமே பிரம்மத்தின் பிரதிபலிப்பே என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.