ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை ஐந்தாம் பாசுரம்: மாயனை மன்னு

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை ஐந்தாம் பாசுரம்: மாயனை மன்னு……செப்பேலோர் எம்பாவாய்

பொதுவாக, சாஸ்திரத்தில் நாராயணனுக்கு ஐந்து ரூபங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அவை பர (பரமபத ரூபம்), வ்யூஹ (திருப்பாற்கடல் ரூபம்), விபவ (அவதார ரூபம்), அந்தர்யாமி (நமக்குள்ளே ஒரு அனுவாய், நம்மை நடத்திச் செல்லுபவன்) மற்றும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் அர்ச்சாவதார (அர்ச்சை) ரூபம். இவ்வாறு உள்ள ஐந்து ரூபங்களை மூன்று ரூபங்களுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, பரமபத நாதனையும், நம்முள் அந்தர்யாமியாய் இருப்பவனையும் நம்மால் பார்க்க முடியாததால், அவற்றை ஒரே ரூபம் போல் பாவிக்கலாம். அதே போல், எம்பெருமானின் அவதாரங்களை பார்க்க நம்மால் முடியாததனால், திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் கோலத்தில் அவர்களை தரிசித்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, கிருஷ்ணாவதாரம் முடிந்து பல வருடங்கள் கழித்தல்லவோ கோதை பிறந்தாள்? ஆனால், திருவில்லிப்புத்தூரில் இருக்கும் அர்ச்சாவதரமான வாதபாத்ரசாயி பெருமாளையே கிருஷ்ணாவதாரம் எடுத்து ஆய்ப்பாடியில் வசித்த கண்ணனாக பாவிக்கிறாள். அதனால், விபவ மற்றும் அரச்ச ரூபத்தை நாமும் ஒன்றாகவே பாவிக்கலாம். இவ்வாறு இருக்க, எம்பெருமானின் ஐந்து ரூபமானது மூன்றுக்குள் அடங்கி விடுகின்றன. இந்த மூன்று ருபங்களயே மற்ற ஆழ்வார்களும் பெரும்பாலும் பாடியிருக்கிறார்கள்.

திருப்பாவை முதற் பாசுரத்தில், ஆண்டாள் பரமபத நாதனிடம் பகவத் அனுபவம் புரிய அவன் திருக்கண் கடாக்ஷத்தை கேட்டதை பார்த்தோம். இரண்டாம் பாசுரத்தில், திருபாற்கடலில் வீற்றிருக்கும் பரமன் அடி பாட கோட்பாடு விதித்ததையும் பார்த்தோம். மூன்றாம் பாசுரம் தொடங்கி ஐந்தாம் பாசுரம் வரை, எம்பெருமானின் விபவ அவதாரங்களான வாமன மற்றும் இராம அவதாரங்களை பாடியிருந்ததை ரசித்தோம். இந்த வரிசையில், நாம் கிருஷ்ணாவதாரத்தை குறிக்கும் ஐந்தாம் பாசுரத்தைப் பார்போம். இந்த பாசுரத்துடன் திருப்பாவை அவதாரிகை (முன்னரை) முற்று பெறுகிறது.

பாசுர அர்த்தம்: 
மாயனை நம்மால் க்ரஹிக்கமுடியாத மாயங்கள் புரிபவனை;

மன்னு வடமதுரை மைந்தனை வடபாரதத்தில் இருக்கும் திருவடமதுரை திவ்யதேசத்தை தன் இருப்பிடமாக கொண்டவனை;

தூய பெருநீர் யமுனை துறைவனை புனித தீர்த்தம் கொண்ட யமுனை நதியையே பற்றிக்கொண்டிருப்பவனான;

ஆயர் குலத்துள் தோன்றும் அணிவிளக்கை ஆயர் குலத்துக்கு விளக்காய் வந்துதித்த பெருஞ் ஜோதியை;

தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை தன்னை ஈன்ற அன்னையின் கர்பத்துக்கு பெருமை சேர்த்தவனை;

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க அவனுக்கு நண் மலர்கள் தூவி அவனை சிந்தை செய்தபடி இருந்தோமேயானால்;

போய பிழையும் ஆதிக் காலத்திலிருந்து நாம் செய்த பாவச் செயல்களும்;

புகுதருவான் நின்றனவும் வரும்காலத்தில் நாம் செய்யவிருக்கும் பாவ கார்யங்களும்;

தீயினில் தூசாகம் செப்பு ஏலோர் எம்பாவாய் தீயில் கருகி உருவிழந்து போகும் பஞ்சைப்போல் மறைந்துவிடும்.

ஸ்வாபதேச அர்த்தம்:
திருப்பாவை முதற் பாசுரத்தில் ஆண்டாள் நோன்பை தொடங்குகிறாள். இரண்டாம் பாசுரத்தில் நோன்பு நோற்கும் போது செய்ய வேண்டியதையும் செய்யக் கூடாததையும் சொல்லுகிறாள். மூன்றாம் பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும்பொழுது நோன்பு நோற்பவற்கு விளையும் செல்வங்களை கூறுகிறாள். நான்காம் பாசுரத்தில் வருண பகவானை அழைத்து அடைமழையைப் பொழிய ஆணையிடுகிறாள். இந்த ஐந்தாம் பாசுரத்தில், எந்தத் தடையுமின்றி நோன்பு தொடர கண்ணனிடம் சரணாகதி அடைய வேண்டிய தத்துவத்தை விளக்குகிறாள். அதாவது, நான் நோன்பு நோற்கிறேன் என்ற சிந்தை அகன்று கண்ணனே என்மூலம் இந்த நோன்பு நோர்கிறான் என்ற தெளிவு பிறக்கும்போது, இடையூரில்லாமல் இந்த நோன்பு நடந்துவிடும் என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்திக் காட்டுகிறாள்.

இந்த பாசுரதுக்கே முதற் எழுத்தான மாயன்தான் முக்கியமான சொல். நான்காம் பாசுரத்தில் நாம் பார்த்த பற்பநாபனுக்கும், இந்த பாசுரத்தில் நாம் பார்கவிருக்க தாமோதரனுக்கும் இந்தச் சொல் பாலமாக அமைகிறது. பற்பநாபனை நான்காம் பாசுரத்தில் விளக்கும் போது, உயர் வற உயரும் பெருந்திரலோன் என்று ஆழ்வார் கூறியதை பார்த்தோம். ஜகத்காரகனான பற்பநாபன் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன். நம் ஐம்புலனால் அனுமானிக்க (உணர) முடியாதவன். நம்மையும் சேர்த்து இந்த பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டிக்கும் அவன் சௌலப்யன் (அனுகமுடிந்தவன்) அல்லன். உயர்ந்த கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ளவன். நம்மாழ்வார் கூறுவது போல் உயர்வற உயர் நலம் உடையவன்.

ஆனால், நமக்கு நடுவே இராமனாக, கண்ணனாக பிறந்து, நாம் அனுபவிப்பதுபோல் கஷ்டங்களை அனுபவித்தவனும் அதே நாராயணன். தான் செய்த குரும்புகளுக்காக தாம்புக் கயிற்றால் வயிற்றை சுற்றி கட்டப்பட்டவன் கண்ணன். தன் தந்தையின் வார்த்தைக்கு அடிபணிந்து பதிநான்கு வருடம் வனவாசியாய் பல இன்னல்களை அனுபவித்தவன் இராமன். ஒரு பாகவதனுக்கு (யசோதை, தசரதன்) அடிபணிந்து எம்பெருமான் செயல்படுவது அவனின் தாமோதரத்வத்தை (எளிதாக அனுகக்கூடியவனாக இருக்கும் தன்மையை , சௌலப்யத்தை ) காட்டுகிறது. 

இந்த உலகத்தை ஸ்ரிஷ்டித்து நாம் உயர உயர நம்மால் அணுகமுடியாமல் இருக்கும் பற்பநாபந்தான் நம்முடைய நடுவே அவதரித்து நம்மைப்போல் வாழ்ந்து காட்டியவன். இவ்வாறு அவன் அவதாரம் எடுக்கும் போது, ஜீவாத்மாக்களுக்கு அவனிடமே சரணாக புகல ஒரு வாய்ப்பை வழங்குகிறான். அவனின் சௌலப்ய குணத்தை தான் இந்த பாசுரம் மூலம் ஆண்டாள் எடுத்துக் காட்டுகிறாள்.