திங்கள், 6 பிப்ரவரி, 2012

திருமூழிக்களம் - திருக்காட்கரை : திவ்யதேச அனுபவம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

அடியேன் குடியரசு தினத்தன்று திருமூழிக்களம் மற்றும் திருக்காட்கரை என்கின்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுக்கு சென்றிருந்தேன். இத்துடன் அடியேனுடைய மலையாள நாட்டு திவ்யதேச யாத்திரைகள் முற்று பெற்றுவிட்டன. அடியேனுடைய அனுபவங்களை பாகவதர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கே இந்த கட்டுரை.

முதலில் சென்ற இடம் திருமூழிக்களம். கேரளவாசிகள் மூழிக்குளம்என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. அதாவது, இராமனை தேடி வந்த பரதன் அவரை வதம் புரிய வந்திருக்கிறான் என்று லக்ஷ்மணன் பாகவத அபசாரம் புரிந்ததற்காக ப்ராயச்சித்தம் தேடிய இடம். இங்குள்ள எம்பெருமானை வேண்டுவதன் மூலம் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாகவத அபசாரங்கள் ஒழியும் என்பது ஐதீகம். பொருளாதார வளர்ச்சியினால் சற்றும் சீர்குலையாத ஒரு திவ்யஸ்தலம். வாழை, பலா, மா என்ற முக்கனிகளின் தோட்டங்கள் சூழ்ந்த ஒரு அமைதியான (சிறிய) நகரம்.

காலையில் நான்கு மணிக்கே இத்திருக்கோவிலுக்கு அடியேன் வந்து சேர்ந்தபடியால் சந்நிதி திறக்கும் வரை ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் கேரளாவின் வழக்கத்துக்கு மாறாக தேநீர் கடைகள் நான்கு மணிக்கே திறந்துவிட்டன. கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை என்ற நதியில் ஸ்நானம் செய்து என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டேன். திருப்பல்லாண்டு துவங்கி எம்பெருமானை சேவித்துக்கொண்டே திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான் மற்றும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை ப்ரத்யேகமாக சேவிக்க பாக்யம் கிடைத்தது. இத்தல பெருமாளை பற்றி ஆழ்வார்கள் வாய்மொழிந்த பெரிய திருமொழி மற்றும் திருவாய்மொழி பாசுரங்களையும் சேவித்தேன். இத்தல பெருமாளை திருமங்கயாழ்வார் பின்னோர்கள் வணங்கும் சோதிஎன்று பாடுகிறார். அதாவது, எம்பெருமானின் விபவ அவாதாரங்களை காணக் கிடைக்காத நம்மைபின்னோர்கள்என்று விசேஷித்து, நம்முடைய இக்குறையை தீர்க்கவே எம்பெருமான் இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது ஆழ்வார் வாக்கு. இத்தல பெருமாளுக்குமார்தவம்என்ற குணம் மேலோங்கி இருக்கிறதாம். மார்தவம் என்பது தன்னை சார்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிவதை சகிக்கமுடியாத ஒரு தன்மை. எனவே, இத்தலத்து பெருமாளை தரிசிக்கும் போது அவருக்கருகே நாம் சில நொடிகள் கழிப்பது போன்றொரு உணர்வு.

கண்டருளப் பண்ணுதல் முடிந்தக் கையேடு எம்பெருமானின் உற்சவரை கோவிலின் ப்ரஹாரத்தை சுற்றி மூன்று முறை ப்ரதக்ஷனமாய் எழுந்தருள பண்ணுதல் இக்கோவில் மரபு. அந்த சேவை முடிந்த உடனே ஒரு ஏழரை மணிப்போல் ஆலுவா (Alwaye) சென்றடைந்தேன். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை சென்றடைந்தேன். இத்தலத்தை த்ரிக்காக்கராஎன்னும் வாமன க்ஷேத்ரம்என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். எம்பெருமானின் வாமன அவதாரம் இத்தலத்தில் தான் அரங்கேறியது என்று புராணம். ஆகவே, மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் இங்கு மிக சிறப்புடனும் செம்மயுடனும் கொண்டாடப்படுகிறது. நகர கோட்டத்துக்கு உட்பட்டிருக்கிற ஸ்தலம் என்பதால் இங்கு ஜனநெரிசல் சற்று மேலோங்கி இருந்தது. எம்பெருமானின் திருக்கோலமும் மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருந்ததால் அடியேன் கூட்டத்தோடு போராட அவசர சேவையே நடந்தது. பிரதக்ஷனமாய் வந்து நம்மாழ்வாரின் இத்தல பாசுரங்களை சேவித்தேன். ஒரு பத்து மணிப்போல் இரண்டுக்கோவில் தரிசனங்களும் முடிந்துவிட்டன.

பின்குறிப்பு:
இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோ, குளியல்-கழிப்பறை வசதிகளோ கிடையாது. ஆறு, தோப்பு என்றவாறு திறந்தவெளி வாழ்க்கை தான். எனவே நாகரீக வாழ்க்கைக்கே பழக்கிப்போன நகரப் பயணிகள் ஆலுவா அல்லது எர்ணாகுளத்தில் தங்கி இத்தலங்களை தரிசித்தல் உத்தமம்.