ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை மூன்றாம் பாசுரம்: ஓங்கி உலகளந்த

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை மூன்றாம் பாசுரம்: ஓங்கி உலகளந்த….நிறைந்தேலோர் எம்பாவாய்

பாசுர அர்த்தம்:
ஏழுலகத்தை தன் பொற்பாதங்களால் அளந்த உத்தமனின் புகழை பாடும்போது, மாதத்திற்கு மூன்று முறை மழை தப்பாமல் பெய்து அமோக நெற்விளைச்சலை தரும்; நெற்பயிர்களின் நடுவே தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்; குவளை மலர்களின் மேலே உண்ட மயக்கத்தில் பொறிவண்டுகள் கண்ணுறங்கும்; மடியை தொட்ட உடனே பசுக்கள் குடம் நிறைய பால் சுரக்கும். இந்த உலகமே சீரும் செழிப்புமாக உய்யும்.

ஸ்வாபதேச அர்த்தம்:
இந்த பாசுரத்தில், ஆண்டாள் எம்பெருமானின் விபவ அவதாரமான வாமன அவதாரத்தை விவரிக்கிறாள். எம்பெருமானின் இந்த அவதாரம் திருமங்கை ஆழ்வார் (திருநெடுந்தாண்டகம்) மற்றும் நம்மாழ்வாரின் (திருவாய்மொழி: ஆழியெழ, ஒழிவில்காலம்) சிந்தைகளையும் கவர்ந்தவை என்று காண்க.

எம்பெருமான், தனது வாமன அவதாரத்தில், தன் இரண்டு பாதங்களால் ஏழ் உலகங்களையும் அளந்தான் என்பது நாம் அறிந்த விஷயம். இந்திரனிடத்திலிருந்து மகாபலி என்னும் அரக்கனால் அபகரிக்கப்பட்ட மூவுலகங்களை கைப்பற்ற, எம்பெருமான் அந்தனம் கேட்கும் ஒரு ப்ராமணனாக அவதாரம் செய்து அவனிடம் மூன்றடி மண் கேட்டு ஏழ் உலகத்தையும் அளந்தான். இப்படி உயர்ந்து (ஓங்கி) உலகை அளந்த எம்பெருமானைஉத்தமன்என்று ஆண்டாள் பாடுகிறாள். அதாவது, தன் அடியார்க்கு (இந்திரனுக்கு) உதவி புரிவதற்கு, தன்னையே தாழ்த்திக்கொண்டு, ஒரு அரக்கனிடம் கையேந்தும் அந்தனனாக அவதரித்தது ஒரு உத்தமனின் செயல் அல்லவா? ஸ்ரிஷ்டிக்கும் போதும், பிரளயத்தின் போதும் இந்த உலகத்தை தன் வயிற்றில் சுமந்தவன் அல்லவோ எம்பெருமான்? இந்த உலகத்தையே தன் சொந்தமாகக் கொண்ட எம்பெருமான் வெறும் மூன்றடி மண்ணுக்காக கையேந்தியது அவனின் உத்தம ஸ்வபாவத்தை வெளிப்படுத்துகிறது அல்லவா? எனவே தான் ஓங்கி உலகளந்த உத்தமன்.

எம்பெருமானின் இந்த விபவாதாரம் வெறும் இந்திரனால் ஆளப்படும் மூவுலகங்களை மீட்கவா? மூவுலகை மீட்கும் காரணத்தைக் கொண்டு எதற்கு ஏழுலகை அளக்க வேண்டும்? கூரத்தாழ்வார் இந்த சந்தேகத்தை எழுப்பியதும் இல்லாமல் அதற்கு தானே விளக்கமும் தருகிறார். எம்பெருமானின் இந்த அவதாரம், வேதங்களில் புதைந்து கிடக்கும் திருமந்திரத்தின் சாரார்தத்தை விளக்கவே என்று சாதிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார், தன் திருநெடுந்தாண்டகத்தில் இந்திரற்கும் பிரமற்கும்மற்றும்ஒன் மிதியில் புனல்பாசுரங்கள் மூலம் இதே தத்துவத்தை எடுத்துக் காட்டிருக்கிறார். திருநெடுந்தாண்டகத்தில், ஆழ்வார் தன் மனதுடன் பேசிக்கொள்வது போல் பாசுரங்கள் அமைந்துள்ளன. ஆழ்வார், தன் மனதை திருமந்திரத்தின் அர்த்தங்களை அறிந்து கொள்ள ஆணையிடுகிறார். அதற்கு அவர் மனம், தான் புரிந்து கொள்ள முற்பட்டும் அர்த்தம் புலப்படவில்லை என்று பதில் தெரிவிக்கிறது. அதற்கு ஆழ்வார், தன் மனதை திருக்கோவலூரில் லோக மாயையுடன் (கண்ணனுக்கு பதிலாக தேவகி கருவில் இடம் மாற்றப்பட்ட துர்க்கை) எழுந்தருளியிருக்கும் திருவிக்ரமரை சேவிக்க அழைக்கிறார். திருவிக்ரமரை தரிசித்தாலே திருமந்திரத்தின் அர்த்தம் ப்ராப்யமாகும் என்பது ஆழ்வாரின் கருத்து.

திருவிக்ரமரை தரிசித்தால் எப்படி திருமந்திர அர்த்தம் புலப்படும்? இதற்கு சற்று பின்சென்று வாமன புராணத்தை பார்க்க வேண்டும். எம்பெருமான் திருவிக்கிரம அவதாரம் எடுத்து, தன் இடக்காலால் வானுலகத்தை அளந்த போது, பிரம்மா ஜலம் கொண்டு வந்து அவர் பாதங்களை அலம்பினார். அந்த ஸ்ரீபாத தீர்த்தம் தரணியில் சொட்டியப்போது அதுவே கங்கை நதியாக உருவெடுத்தது. அப்படி சொட்டிய ஸ்ரீபாத தீர்த்தத்தை தன் சிரஸில் (கங்கையாக) ஏந்திக் கொண்டதால் ருத்ரன் புனிதம் அடைந்தான் என்று கூறுகிறது புராணம். இந்தக் கோணத்தில் பார்த்தால், பிரம்மா, ருத்ரன், போன்றவற்கே அந்தர்யாமியாய் நாரணன் திகழ்கிறான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தான் நம்மாழ்வார் திருவாய்மொழி முதற்பத்து எட்டாம் பாசுரத்தில் விளக்கினார்:

புரமொருமூன்றெரிந்து அமரர்க்குமறிவியந்து...
...அரன் அயன் என உலகழித்தமைத்துளனே.

அதே போன்று, தன் பாதங்களால் ஏழுலகங்களும் அளந்து, நாம் எல்லாம் அவன் திருவடிக்கு கீழே என்று அவனின் பாரதந்த்ரியத்தையும், நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவன் திருவடியே உபாயம் என்று அநந்ய சேஷத்வம் எனப்படும் திருமந்திரத்தின் ஒரு பாத அர்த்தத்தையும் தன் அவதாரம் மூலம் திருஷ்டாந்தமாக விளக்கியிருக்கிறார் எம்பெருமான்.

இவ்வாறு ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடி அவனின் கல்யாண குணங்களை அனுபவிக்கும் போது, திருமந்திரத்தின் மூன்று பாத அர்த்தங்களும் நம்மேல் மும்மாறி பொழியும். அப்படி பொழியும் போது நமக்கு ஏற்படும் அர்த்த பஞ்சக ஞானமானது, தேயா நிலவைப் போல் (மதி நிறைந்த மார்கழித் திங்கள் போல்) ஜ்வலிக்கும். இவ்வாறு நமக்கு கிடைக்கும் ஞானமானது ஐஸ்வர்ய போகங்களை காட்டிலும் நீங்காத செல்வமாக நம்முடன் எப்பொழுதுமே இருக்கும். இந்த ஞானம் என்ற செல்வத்தையே ஆண்டாள் ஓங்கி வளர்ந்திருக்கும் செந்நெல், உகளும் கயல்கள், கண்ணுறங்கும் பொரிவண்டுகள், பாற்குடங்களை பாலால் நிறைக்கும் பசுக்கள் என்று விவரிக்கிறாள். நீங்காத செல்வம் என்று உரைத்து எதற்கு நீங்கும் செல்வங்களை உதாரணமாக ஆண்டாள் தருகிறாள் என்று சந்தேகம் எழலாம். பகவத் விஷயத்தில் இச்சை உள்ளவர்களை, இந்த செல்வங்களை பற்றி பேசி கவர்ந்து அவர்களை பகவத் அனுபவத்தில் ஆழ்த்த ஆண்டாள் முற்படுகிறாள். அவ்வாறு ஈடுபட்ட பாகவதர்களுக்கு தானாகவே உயர்ந்த பொருட்களை நாட அவசியமான ருசி பிற்பாடு பிறந்துவிடும்.