ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை இரண்டாம் பாசுரம்: வையத்து வாழ்வீர்காள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை இரண்டாம் பாசுரம்: வையத்து வாழ்வீர்காள்…..படிந்தேலோர் எம்பாவாய்

பாசுர அர்த்தம்:
இந்த உலகத்தில் வாழ்பவர்களே! நோன்புக்கு நாங்கள் செய்யும் க்ரியைகளை கேளீர்! பார்கடலில் சயனித்து கொண்டிருக்கும் பரந்தாமனை வாழ்த்தி பாடிக்கொண்டிருப்போம். பூர்வர்கள் அனுசந்தித்த வாரு, தவிர்க்க வேண்டிய தீய க்ரியைகளை தவிர்ப்போம். பாகவதர்களை பற்றி இழிவாக பேச மாட்டோம். எங்கள் ஆஹாரத்தில் பால், நெய் முதலானவற்றை சேர்த்துக் கொள்ள மாட்டோம். தாராளமாக தானங்கள், தர்மங்களில் ஈடுபட்டு, உய்வதற்கு (உயர்ந்த பொருளை நாடுவதற்கு) தேவையான ஆறு காரியங்களில் ஈடுபடுவோம்.

ஸ்வாபதேச அர்த்தம்:
நஞ்சீயர் தனது வ்யாக்யானத்தில் பகவத் அனுபவத்துக்கு தேவையான முக்கிய அதிகாரம் இச்சை என்று தெரிவிக்கிறார். அதாவது, பகவத் விஷயத்தில் ஒரு ஜீவன் இச்சை கொள்ளும் போது, பகவானின் இறக்கம் என்னும் உபாயம் கிட்டி, பகவத் கல்யாண குணங்களை அனுபவிக்கும் உபேயம் என்கின்ற இனிமயை பெருகிறான்.

பெரியாழ்வார், தனது திருப்பல்லாண்டில், “வாழாட்பட்டு நின்று உள்ளீரேல்என்றுபகவானுக்கு தொண்டு செய்து வாழவேண்டும்என்ற இச்சை கொண்டவர்களை அழைக்கிறார். அதே ப்ரபந்தத்தில் கூடு மனமுடையீர் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோஎன்று பகவத் விஷயத்தை கற்றுக்கொள்ள ஸ்ரத்தை உள்ளவர்களை வரம்புகளை உடைத்தெறிந்து உடனே வந்துவிட அழைக்கிறார். அதே போல, தனது முதற் பாட்டில், பகவத் அனுபவத்தை அனுபவிக்க இச்சை உள்ளவர்களை நீராட வாரீர்என்று ஆண்டாள் அழைத்ததை நேற்று பார்த்தோம்.

பாவை நோன்பு நோற்பவர்களுக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும் தெரிவிக்கிறாள்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள் யாவையெனில்- மை இடுதல், மலரிட்டு முடிதல் போன்று தேக அழகை கூட்டவல்ல அலங்காரங்கள்; பால் அருந்துதல், நெய் உண்ணுதல் போன்று உடம்புக்கு போஷாக்காக நாம் உட்கொள்ளும் ஆஹாரங்கள்; பாகவதர்களை இழிவாக பேசுதல் (மற்றும் மனத்தால் தீங்கு நினைத்து அபச்சாரம் செய்தல்); பூர்வாசார்யர்கள் அனுஷ்டிக்காத கார்யங்களில் ஈடுபடுதல்.

செய்ய வேண்டிய விஷயங்கள் யாவையெனில் பரமனின் அடி பாடுதல் (பகவான் நாம சங்கீர்த்தனம் செய்தல்), நாட்காலே நீராடுதல் (நித்யம் அனுஷ்டிக்கப்படவேண்டிய கர்மங்களை செய்தல்), ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டுதல் (ஒருவனுக்கு ஆசார்ய அனுபவம் கிடைக்க வழி செய்தல் = ஐயம்; ஒருவனுக்கு பகவத் அனுபவம் கிடைக்க வழி செய்தல் = பிச்சை); உய்யும் ஆறு எண்ணி உகந்தல் (உய்வதற்கு ஹேதுவாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை பின்பற்றுதல்).

உய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு உபாயங்கள் பற்றி இரண்டு விதமான விளக்கம் வழங்கப்பட்டிருக்கிறது: ஒன்று, எம்பெருமானாரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய திருக்கச்சி நம்பிகள் மூலம் தேவராஜ பெருமாள் வாய்மொழிந்த ஆறு வார்த்தைகள்: 1) அஹமேவ பரம் தத்தவம் (நாராயணனே பரம்பொருள்), 2) தர்ஷனம் பேதம் ஏவா ச (சித், அசித், எல்லாமே அவனுள் அடக்கம், அவனே ஜீவன்கள் அனைத்துக்கும் அந்தர்யாமி), 3) உபாயேஷு பிரபத்திஸ்யாத் (சரணாகதியே உபாயம்), 4) அந்திம ஸ்ம்ரிதி வர்ஜனம் (ஒருவன் இறுதி மூச்சு விடும் நேரத்தில் பகவானை நினைக்க வேண்டியதில்லை), 5) தேஹாவாசனே முக்திஸ்யாத் (உடலை விட்டு பிரியும் ஆன்மாவுக்கு சரணாகதி செய்திருந்தால் மட்டுமே மோக்ஷம்), 6) பூர்ணாஷ்ரயம் சமாச்ரையே (முழுவதும் கற்றறிந்த ஆசார்யனிடம் சென்று பகவத் விஷயம் பயில வேண்டும்).

இரண்டு- எம்பெருமானார் திருநாடு அலங்கரிப்பதற்கு முன் (அந்திம அக்ஞைகளாக) ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவனும் செய்ய வேண்டிய கடமைகளை விவரித்தார். ஆண்டாள் கூறும் உய்யும் ஆறு” இவைகளையும் குறிக்க வாய்ப்புண்டு. எம்பெருமானாரின் ஆறு பரிந்துரைகள் யாவையெனில்: 1) ஸ்ரீ பாஷ்யத்தை கற்று ப்ரவர்த்தித்தல், 2) திருவாய்மொழி சாரத்தை கற்று ப்ரவர்த்தித்தல், 3) அருளிச் செயல்களை வ்யாக்யானத்துடன் பயிலுதல், 4) திவ்ய தேசத்தில் வாசம் செய்து புஷ்ப, கோல கைங்கர்யம் செய்தல், 5) ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் அபிமானத்துக்கு பாத்திரம் ஆகுதல், 6) திருநாராயணபுரம் என்கின்ற மேல்கோட்டையிலே குடில் கட்டி வசித்தல்.