ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை 14 ஆம் பாசுரம் – உங்கள் புழைக்கடை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை 14 ஆம் பாசுரம் – “உங்கள் புழைக்கடை…..பாடேலோர் எம்பாவாய்

பாசுர அர்த்தம்:
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் உன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் குளத்தில்;

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து செங்கழுநீர் என்கின்ற ஒரு வகை தாமரைப்பூவின் வாய் மலர்ந்திருக்கிறது;

ஆம்பல் வாய் கூம்பின காண் ஆம்பல் மலர்களின் மொட்டு மூடிக்கொண்டிருப்பதைப் பார்!;

செங்கல் பொடிக்கூரை சிவப்பு நிறத்து ஆடை அணிந்த ஸந்யாசிகள்; இப்பாசுரத்தில் சிவப்பு நிறத்து ஆடை அணிவது என்பது ராஜஸ குணங்களை தங்களின் தேஹத்துக்கு வெளியே விட்டுவிட்ட முனிவர்களை குறிக்கிறது;

வெண்பல் தவத்தவர் தங்களுடைய உடல் முழுவதும் சாத்வீக குணம் வழிவதால் வெண்மையான பற்கள் உடையவர்கள் என்று ஸந்யாசிகளை குறிக்கிறது;

தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போகின்றார்- ஸந்யாசிகள் அவரவர் திருக்கோவில்களில் சங்கின் கோஷமிட்டு விஸ்வரூப சேவை புரிய போய்க்கொண்டிருக்கிறார்கள்;

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் - எங்களுக்கு முன்னரே எழுந்து எங்களையும் எழுப்புவாய் என்று வாக்கு கொடுத்த பெண்மணியே;

நாணாதாய் நாவுடையாய்- அவ்வாறு கூறிவிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருப்பது உனக்கு வெட்கம் தரவில்லையா?

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் சங்கோடு சக்கரம் கொண்டு சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷனை;

பங்கயக் கண்ணானை தாமரை மலர்கள் போல் கண்கள் உடையவனை;

பாடேலோர் எம்பாவாய் பாட எங்களுடன் வருவாயாக.

எங்களுக்கு முன்னரே எழுந்து எங்களை எழுப்புவாய் என்று வாக்கு கொடுத்த பாவையே! உன் பேச்சுக்கு முரண்பாடாக இன்னும் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? விடிந்ததற்கு அடையாளமாக உன் தோட்டத்தில் உள்ள செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. உன் தோட்டத்தில் உள்ள ஆம்பல் புஷ்பங்கள் தங்கள் மடல்களை மூடிக்கொண்டுவிட்டன. சிவப்பு நிற ஆடை அணிந்தும் வெள்ளை நிற பற்களும் கொண்ட ஸன்யாசிகள் தங்கள் திருக்கோவில்களில் விஸ்வரூப சேவை தொடங்கியதுக்கு அடையாளமாக சங்கின் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உன் தூக்கத்தை கலைத்து எங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி சேவை சாதிக்கும் தாமரை திருக்கண்கள் கொண்ட எம்பெருமானை பாட உடனே வாராய்!

ஸ்வாபதேச அர்த்தம்:
இந்த பாசுரம் மூலம், ஆசார்ய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆண்டாள் எடுத்துக் காட்டுகிறாள். முன்பு விளக்கத்தில் கூறியவாறு பகவத் அனுபவம் என்பதை ஒரு ப்ரபந்நனால் தனியே அனுபவிக்க முடியாது. ஆசார்ய சம்பந்தம் மூலமே ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் கிட்டும். ஆகவே, உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்புவதைப் போல் பாவித்து ஆண்டாள் ஆசார்யனை தங்களுடன் பகவத் அனுபவம் புரிய அழைக்கிறாள். ஞானம் மற்றும் அனுஷ்டானத்தின் இருப்பிடமாக உள்ள ஆசார்யன் நம்முடைய பகவத் அனுபவத்துக்கு தடையாக இருக்கும் இடையூறுகளை ஒழித்தெறிந்து நமக்கு பகவத் அணுக்ரஹம் கிடைக்கும்படி செய்ய வல்லர். ஆண்டாளுக்கு கிருஷ்ணானுபவம் கிடைக்க இடையூறாக வாயில் காக்கும் த்வாரபாகலன், நந்தகோபன் மற்றும் யசோதை அமைந்திருக்கிறார்கள். இவர்களை கடந்து கிருஷ்ணானுபவம் பெற வேண்டும் என்று ஆசைக்கொண்டு நாவுடைய பெண்மணியான ஆசார்யனை ஆண்டாள் அழைத்து செல்ல முற்படுகிறாள். இதைத் தான் பாசுரத்தில்நாவுடையாய்என்று குறிக்கிறாள்.

திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் தங்களின் பாசுரங்களில் பறவைகளை எம்பெருமானிடம் தூது அனுப்புவது வழக்கம். இவ்வாறு தூது அனுப்பப்படும் பறவைகலானவை ஆழ்வாருக்கு பகவத் சம்பந்தம் ஏற்படுத்த வல்ல கடக க்ருத்யம்என்கின்ற சேவையை புரிகின்றன. அதே போல், நமக்கு சமாஸ்ரயணம் மூலம் பகவத் சம்பந்தம் ஏற்படுத்தி கொடுக்கும் கடக க்ருத்யயத்தை புரிபவர் நம்முடைய ஆசார்யன். பறவைகளுக்கு இரண்டு இறக்கைகள் இருப்பது போல நம்முடைய ஆசார்யனுக்கும் இரண்டு விசேஷனங்கள் உண்டு அவை தான் ஞானம் மற்றும் அனுஷ்டானம். இதைத் தான் மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் ஞானம் அனுட்டானம் இவை நண்ணாகவே உடைய குருவைஎன்று சாதித்தார். அதாவது, ஆசார்யன் என்னும் ஒருவர் ஞானத்தின் இருப்பிடமானவர் மட்டும் அல்லர். தானும் அனுஷ்டானங்கள் புரிந்து அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்.

இப்பாசுரம் மூலம் சக்ரத்தாழ்வார் வைபவத்தையும் ஆண்டாள் விளக்கியிருக்கிறாள் என்று ஸ்வாபதேசம். திருமாலுக்கே அடையாளமாக திகழ்பவர் சக்ரத்தாழ்வார். திருமாலைசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்என்று விஷேஷிக்கிறாள். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார் கூட எம்பெருமானை விசேஷிக்கும் பொழுது அவர் கையில் இருக்கும் சுடராழியை விவரிக்கிறார். எனவே, பெருமாளுக்கே அடையாளமாக இருப்பவர் நம் சுதர்சனர். சங்கும் சக்கரமும் ஏந்தி சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷனை சேவித்தால் நம் பூர்வ ஜன்ம பாவங்கள் தீயினில் தூசாகும் பஞ்சைப்போல மறையும் என்று முன்பு ஒரு பாசுரத்தில் பார்த்தோம். அதே போல், திருமாலின் கையில் இருக்கும் சக்ரதாழ்வாரானவர் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்க தடையாக உள்ள இன்னல்களை உடைத்தெறிய வல்லர். இதற்கு மேலாக, நமக்கு பெருமாள் திருவடி சம்பந்தம் கிடைக்கவும் வழி புரிபவர் சக்கரத்தாழ்வார். அதாவது, சமாஸ்ரயனத்தின் போது சக்கரத்தாழ்வாரின் சின்னம் நமது கையில் பொறிக்கப் படிகிறது. அவ்வாறு பொறிக்கப்படும் சின்னம் மூலம் நமக்கு ராமானுஜ சம்பந்தம் கிடைத்து நம் பகவத் அடியார்கள் ஆகிறோம் அல்லவா? எனவே, நம்மை காப்பாற்றி, நம் பூர்வ ஜன்ம வினைகளை அழிப்பதுமில்லாமல், நமக்கு ராமானுஜ சம்பந்தத்தையும் பெற்று தரும் சக்ரத்தாழ்வாரின் பெருமையை இந்த பாட்டின் மூலம் ஆண்டாள் தெரிவிக்கிறாள்.

பின் குறிப்பு: திருமழிசை ஆழ்வார் சக்ரத்தாழ்வாரின் அம்சமாக பிறந்தவர் ஆதலால், அவரின் பாசுரங்களை சேவித்தால், சம்சாரத்தில் நம்மை கட்டுப்படுத்தி வைக்கும் இன்னல்கள் தொலைந்து நமக்கு பகவத் அனுபவம் கிடைக்க வழி பிறக்கும் என்றும் கூறலாம்.