ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

திருப்பாவை பாசுரம் 1: மார்கழி திங்கள்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை பாசுரம் 1: மார்கழி திங்கள்…………படிந்தேலோர் எம்பாவாய்

பாசுர அர்த்தம்:
செல்வ செழிப்பும், சகல ஐஸ்வர்யங்களும் கொண்ட ஆய்ப்பாடி சிறுமிகளே, இந்த மார்கழி மாத சந்திரன் நிறைந்த பௌர்ணமி நாளில் என்னுடன் பாகவத அனுபவத்தில் நீராட வாருங்கள்! நந்தகோபனின் குமாரனாகவும், யசோதையின் இளஞ்சிங்கமாகவும், கருமை நிறைந்த மேகத்தைப் போல் உடல் நிறம் கொண்டவனாகவும்சிவப்பு நிற கண்கள் கொண்டவனாகவும் திகழும் நாராயணனிடம், அவனுக்கு நித்யப்படி கைங்கர்யம் புரிய நமக்குள்ள ஆசையை வேண்டுகோளாக கேட்போம்!

ஸ்வாபதேச அர்த்தம்:
ஆழ்வார்கள் பாசுரங்கள் இயற்றும் பொழுது வெவ்வேறு அனுகரனங்களை (பாவங்களை) ஏற்றுக் கொள்ளுதல் மரபு. உதாரணத்துக்கு, நம்மாழ்வார், தன்னை பரமபத நாதனாய் பாவித்துக்கொண்டு, தனக்கு உலகை ஷ்ரிஷ்டிக்கும் தன்மை உள்ளாதாக பத்து பாசுரங்களில் தெரிவிக்கிறார். அதே போன்று, திருமங்கை அழ்வார், தன்னை திருக்கண்ணபுரம் அர்ச்சாவதாரமாக அனுகரநித்துக்கொண்டு, ஒரு பாசுரம் இயற்றிருக்கிறார். அனால், ஆண்டாளானவள், தன் முப்பது திருப்பாவை பாசுரங்களிலும், தன்னை ஒரு பாகவத சேஷியாக (சக கோபிகையாக) பாவித்து அருளிச் செய்திருப்பதை காண்க.

தன்கண்ணிநுண் சிருத்தாம்பில்”, மதுரகவி ஆழ்வார் சடகோபரை புகழ்ந்துவேதத்தின் உட்பொருளை என் நெஞ்சில் நிறுத்தினான்என்று சாதிக்கிறார். சடகோபர் இயற்றிய திருவாய்மொழி வேதத்தின் பொருளை நன்கு விளக்குகிறது என்பது உலகறிந்த விஷயம். தன் திருவாய்மொழி முழுவதும் பகவத் சேஷத்வத்தை விளக்கிய நம்மாழ்வார், “பயிலுன் சுடரொளிமற்றும் நெடுமார்க்கடிமைபாசுரங்கள் மூலம் பாகவத சேஷத்வத்தை விளக்கியிருக்கிறார். இந்த பாகவத சேஷத்வத்தை தான் மதுரகவி "வேதத்தின் உட்பொருள்" என்று கண்ணிநுண் சிருத்தாம்பில் சாதிக்கிறார். அதாவது, திருவாய்மொழி = வேதத்தின் பொருள் = பகவத் சேஷத்வம். பயிலுன் சுடரொளி” + “நெடுமார்க்கடிமை” = வேதத்தின் உட்பொருள் = பாகவத சேஷாத்வம்.

பகவத் அனுபவம் தனிமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு அனுபவம் அல்ல. நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ப்ரபந்த சேவை, நாம சங்கீர்த்தன சேவை போன்ற அனைத்தையும் கோஷ்டியாக அனுபவிப்தலே மரபு. ஏனென்றால், மற்ற அனுபவங்களன்றி, பகவத் அனுபவம் பகிர்தலால் இரட்டிப்பு அடைகிறது. அதனால்தான் மதுரகவி ஆழ்வார் பாசுரம் போல் ஆண்டாலும் தன்னை பாகவத் சேஷியாக பாவித்துக் கொண்டு பகவத் அடியார்களை (கோபிகைகளை) பகவத் அனுபவத்தில் நீராட அழைக்கிறாள்.

இந்த நீராடும் அனுபவத்தை ஏன் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டும்? திருப்பாவை நித்யம் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு பிரபந்தம். ஏனென்றால், நாராயணனிடம் அவனுக்கு நித்ய விபூதியில் நிரந்தர சேவை புரிய நமக்கு பாக்கியம் தர வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை அன்றாடம் கேட்க வேண்டாமா? அப்படி இருக்க மார்கழி மாதத்துக்கு மட்டும் ஏன் இந்த ஏற்றம்? இதற்க்கு இரண்டு விதமான விளக்கங்களை கொடுக்கலாம். ஒன்று, மார்கழி மாதம் அதிக வெயிலும் இல்லாத (அதி உஷ்ணம்) அதிக குளிரும் இல்லாத (அதி ஷீதளம்) ஒரு மாதமாகிறது. மிருகசீரிட நக்ஷத்திரத்துடன் பௌர்ணமி கூடி வரும் இந்த மாதமானது சீர்ஷ (உயர்ந்த) மார்கத்தை (வழியை, உபாயத்தை) பின்பற்ற அருமையான தருணமாக அமைகிறது. இரண்டு, பௌர்ணமியில் ஜ்வலிக்கும் பரிபூர்ண மதி சம்பூரணமான அறிவு பெற ஏற்ற தருணம் என்பதை குறிக்கிறது.

ஆய்ப்பாடி சிறுமிகளை நீராட அழைப்பது போல், ஆண்டாள் இந்த உலகில் உள்ளோரை பகவத் அனுபவத்தில் ஆழ்ந்து இருக்க ஆண்டாள் அழைக்கிறாள். இந்த தருணத்தில் கூரத்தாழ்வானின் வரதராஜஸ்தவ ஸ்லோகத்தை சுட்டி காட்ட அவசியம் ஏற்படுகிறது. கூரத்தாழ்வான், வரதராஜ பெருமாளிடம் மோக்ஷத்தை அடைய தான் படும் அவஸ்தைகளை விளக்குகிறார். நான் எனக்கு விதிக்கப்பட்ட கர்மாநுஷ்டானங்களை செய்யாமல் இருக்க முடியாது. ஏனென்றால், அவ்வாறு செய்யாவிடில் நரகம் நிச்சயம் என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கிறார். ஆனால் அவ்வாறு செய்ய கடினமாக இருக்கிறது. அதே போன்று, பக்தி, யோகம் போன்ற உபாயங்களை செய்யவும் என்னால் இயலவில்லை. சரணாகதி செய்யலாம் என்று பார்த்தால் அது என் ஸ்வரூபத்துக்கு விருத்தமாக அமைகிறது (பகவானே என்னுடைய ஸ்வாமி என்ற படியால், நான் யார் என் ஆத்மாவை சமர்ப்பிக்க?). அதனால், ஆழ்வார் அத்திகிரி மலையில் கோயில்கொண்டுள்ள பெருமாளை, தன் திருக்கண் கடாக்ஷத்தை அருவி போல் தன் மேல் தெளிக்கக் கோரி வேண்டுகோள் விடுக்கிறார். அதே போன்று, இங்கு ஆண்டாளும் மார்கழி நீராட்டம் என்ற பெயரில், பகவத் அனுபவம் என்ற கடாக்ஷத்தை கோரி நாராயணனிடம் தனக்கு மட்டுமல்லாமல் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் வாழ்வோருக்கும் சேர்த்து பறை கேட்கிறாள். இங்கே பறை என்பது மோக்ஷத்தை குறிப்பது அல்ல. ஆண்டாள் கைங்கர்ய ப்ராப்தியையே பறை என்று விசேஷிக்கிறாள்.

அவ்வாறு பறை தரும் நாரணனை ஐந்து விசேஷங்கள் கொண்டு விவரிக்கிறாள்: நந்தகோபன் குமரன், அசோதையின் இளம் சிங்கம், கார் முகில் போல் நிறம் கொண்டவன் (லாவண்யம்), செம்மையான கண்கள் உடையவன் (சௌந்தர்யம்), கதிரவனும் (கதிரவன் போல் தேஜஸ் கொண்டவனுமான) சந்திரனும் (சந்திரன் போல் குளிர்ச்சி உடையவனுமான) சேர்ந்த முகம் கொண்டவன் என்று.

அடுத்த பாசுரத்தில் பாற்கடலில் வீற்றிருப்பவனும் அதே நாரணன் என்று ஆண்டாள் சாதிப்பதும், நோம்பு நோற்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள். அடுத்த கட்டுரையில் அதனை விரிவாகப் பார்போம்.