செவ்வாய், 8 அக்டோபர், 2013

திருவாய்மொழியும் பகவத் கீதா பாஷ்யமும்

பகவத் விஷயம், ஸ்ரீவசநபூஷணம் மற்றும் குருபரம்பரை ப்ரபாவம் முதலிய நூல்களில் ஓர் நிகழ்வு காணப்படுகிறது. இந்த நிகழ்வை சற்று இங்கே விளக்கி எம்பெருமானார் எவ்வாறு திருவாய்மொழி பாசுரங்கள் கொண்டு கீதா பாஷ்யத்தை ஒருங்கவிட்டிருக்கிறார் என்று காட்ட முற்படுவோம்.
 
ஒருமுறை எம்பெருமானார் உபயவேதாந்த ப்ரவசனம் செய்துகொண்டிருந்தபோது அவர் கோஷ்டியில் எழுந்தருளியிருந்த ஒருவர் "இந்த ஆத்மாவுக்கு ஜ்ஞானமும், சேஷத்வமும் ஸ்வரூபம் என்று தேவரீர் சாதித்தீரே, இதற்கு நிரூபகம் (proof) எது?" என்று வினவினார். 

இதற்கு பதில் பிரஸ்தாவிக்க எம்பெருமானார் சர்வஜ்ஞராக (qualified) இருந்தபோதும் இவ்வர்த்தத்தை ஒரு ஆசார்யரை கொண்டு வெளியடவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி திருக்கோஷ்டியூர் நம்பியிடம் இவ்வர்த்தத்தை அறிந்துவரும்படி கூரத்தாழ்வானை நியமித்தார். ஆழ்வானும் ஆறுமாத காலம் நம்பி பக்கலில் காத்துகிடந்து *அடியேனுள்ளான் உடலுள்ளான்* என்கிற திருவாய்மொழி பாசுரத்திற்கு விளக்கத்தை பெற்று அதையே எம்பெருமானாரிடம் வந்து விஜ்ஞாபித்தார். ஆழ்வான் கற்றுவந்த பாசுரத்தின் உட்பொருளை எம்பெருமானார் அங்கே எழுந்தருளியிந்த கோஷ்டிக்கு விளக்கினார். இதனை சற்று ஈண்டு நோக்குவோம்.

"அடியேன்" என்கிற சொல் நாலாயிரத்தில் பலவிடங்களில் நமக்கு காணக்கிடைக்கின்றன. நம்மாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே திருவிருத்தத்தில் "அடியேன் செய்யும் விண்ணப்பமே" என்று தொடங்குகிறார். இப்படி அடியேன் என்ற சொல் பலவிடங்களில் இருக்க, திருவாய்மொழியில் ஒரு மூலையில் *அடியேனுள்ளான்* என்றவிடத்தை மட்டும் நம்பி ப்ரஸ்தாவித்ததற்கு காரணம் என்ன? இதனை சற்று மேலே பார்ப்போம்.

*அடியேன்* என்கிற சொல் பொதுவாக தேஹத்தை விசேஷணமாக (attribute) கொண்ட ஆத்மாவை குறிக்கும். இதற்கு உதாஹரணமாக மேலே சாதித்த *அடியேன் செய்யும் விண்ணப்பமே* என்கிற பாசுர தொடரை நோக்குவோம். ஜடப்பொருட்களால் உண்டான தேஹம் விண்ணப்பஞ்செய்ய முடியாததாகையாலே, இங்கே ஆத்மாவே விண்ணப்பம் செய்கிறதென்பது திண்ணம். இதேபோல், *அடியேன் சிறிய ஞானத்தன்* என்னுமிடத்திலும் 'ஞானத்தன்' சொல் மூலம் ஞானமுடைமை (possession of knowledge) சொல்லப்படுவதால் இச்சொல்லும் ஆத்மாவையே குறிக்கிறது என்பது திண்ணம்.

ஆனால், *அடியேனுள்ளான் உடலுள்ளான்* பாசுரத்தில் ஆத்மாவுக்கு விசேஷணமான தேஹவஸ்துவை *உடலுள்ளான்* எனும் சொற்றொடர் கொண்டு ஆழ்வார் அருளிச்செய்துள்ளபடியால் அவ்விடத்தில் *அடியேன்* என்கிற சொல் விசேஷணமின்றி ஆத்மாவை மட்டுமே குறிக்கும். இந்த பாசுரத்திற்கு அர்த்தம் கீழ்வருமாறு: *அடியேனுள்ளான்* என்னுமிடம் எம்பெருமான் இவ்வாத்மாவில் அனுப்ரவேசித்திருப்பதை சொல்கிறது. *உடலுள்ளான்* என்னுமிடம் எம்பெருமான் ஜடப்பொருட்களிலும் அனுப்ரவேசித்திருக்கிறான் என்று சொல்கிறது.

'அடியேனுள்ளான்' என்கிறவிடத்தில் 'என்னுள்ளான்' என்று ஆழ்வார் அருளிச்செய்திருந்தாலும் ஆத்ம அனுப்ரவேச பொருள் தேறிவிடும். அவ்வாறு செய்யாமல் *அடியேன்* என்று ஆழ்வார் அருளிச்செய்திருப்பது ஆத்மாவுக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று நன்கு விளக்கிக் காட்டுகிறது. மற்றை பாசுரங்களை காட்டிலும் இப்பாசுரத்தில் சேஷத்வம் விவக்ஷிதமாக  வெளிப்படுவதனால் (expressly meant) நம்பிகள் ஆழ்வானுக்கு இவ்வர்த்தத்தை அருளிச்செய்திருக்கிறார்.

சரி, இப்பேற்பட்ட உயர்ந்த திருவாய்மொழி அர்த்தத்தை நம் எம்பெருமானார் எங்கே பாஷ்யமிட்டு வெளியிட்டிருக்கிறார் என்று பார்ப்போம்:

சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதி நோர்ஜூந: |
அர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப!   || (பகவத் கீதை 7-16)

இந்த ஸ்லோகத்திற்கு பாஷ்யமிட்ட எம்பெருமானார் "பகவச் சேஷதைகரஸ ஆத்மா ஸ்வரூபவித் ஜ்ஞாநீ" என்று அருளிச்செய்துள்ளார்.  அதாவது, ஜீவாத்மாவின் ஜ்ஞானத்திற்கு ப்ரயோஜனம் தன் சேஷத்வத்தை அறிவது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளம் இந்த பாஷ்ய பங்க்தி மூலம் நமக்கு தெளிவாக புரிகிறது. நம்மாழ்வார் அருளிச்செயலில் அந்வயமில்லாமல் பாஷ்யகாரரால் இப்படி அருளிச்செய்திருக்க முடியாது என்பது காஞ்சி அண்ணங்கராசார்ய ஸ்வாமியின் திருவுள்ளம்.

Reference: திராமிடோபநிஷத் ப்ரபாவ சர்வஸ்வம்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எந்தத் திருக்காப்பு?


ஸ்ரீவைஷ்ணவர்கள் அணியும் திருமண் காப்பில் தான் எத்தனை வேற்றுமை! ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதயாத்தில் நாம் காணும் திருமண் திருக்காப்பு வேற்றுமைகள் அனைத்தும் பாஞ்சராத்திர ஆகம சாஸ்திரங்களையே அடிப்படையாக கொண்டவை. அப்படி இருந்தும் நம் சம்பிரதாயத்திற்கென்று ஒரு காப்பு, தங்கள் மதத்தாருக்கு ஒரு காப்பு, தங்கள் மதத்தாருக்குள்ளேயே மடத்துக்கு ஒரு காப்பு, முனித்ரயத்திற்கு ஒரு காப்பு. திருமலை திருவேங்கடவனுக்கு ஒரு காப்பென்றால் திருவரங்கனுக்கு வேறொரு காப்பு.
 
இவ்வாறு இருக்க, நம் பூர்வர்களான ஆழ்வார்கள் விரும்பி அணிந்த திருக்காப்பாவது யாது?

வண்பொன்னி பேராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய்
தொண்டர் சேவடி செழுஞ்சேறு
என் சென்னிக்கு அணிவனே

என்கிறார் குலசேகர பெருமாள் (பெருமாள் திருமொழி, 2-3).

எம்பெருமானின் அவதாரப் பெருமைகளை தினந்தோறும் வாயாரப் பாடி, மகிழ்ந்து, ஆநந்தக் கண்ணீரால் எம்பெருமானின் சந்நிதி திருமுற்றத்தை சேறாக்குகிற பாகவதர்களின் திருவடி பட்ட சேற்றை என் நெற்றிக்கு காப்பாக அணிவேன் என்கிறார் குலசேகராழ்வார்.

அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது நெற்றிக்கு தோஷம்தீர மங்களார்த்தமான திலகமாய் கொள்வேன் என்கிறார்.

இங்கே கண்ணநீர் என்பது எம்பெருமானின் நீர்மையை நினைத்து கண்கள் அசும்பொழுக வரும் ஆனந்தக் கண்ணீரைக் குறிக்கிறது. இந்த கண்ணநீருக்கு வெள்ளப்பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை உவமையாக கொள்கிறார் ஆழ்வார்.

இந்த பாசுரத்தின் தேறிய கருத்து யாதெனில், திருமண் காப்பைப் போன்ற புறச் சின்னங்களை காட்டிலும் பாகவத சேஷத்வத்தில் நிலைநிற்கும் நெஞ்சமே ஒரு ஸ்ரீவைஷ்ணவ அதிகாரிக்கு லக்ஷணம் என்கிறார் ஆழ்வார்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஸ்ரீநிவாசன் சங்கு சக்கரமேந்திச் சைவர்களின் சந்தேகம் தீர்த்தல்

குரு பரம்பரை ப்ரபாவத்திலிருந்து ஒரு நிகழ்வு...

உடையவரை அவரின் சிஷ்யர்கள் தண்டனிட்டு ‘தேவரீர் இதர சமயங்களை நிராகரித்து நம் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஸ்தாபனம் பண்ணி அருளினீர்...இனி தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திரிந்து திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து வரவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தார்கள். இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம் தொடங்கி, பாண்டிய மண்டல திவ்ய தேசங்களைச் சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களுக்குச் சென்று, வட நாட்டுக்கு எழுந்தருளி, திருசாலக்கிராமம், திருவதரி முதலான திவ்ய தேசங்களையும் சேவித்தபடியே திருமலை வந்தடைந்தார்.   

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்  - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றா யிசைந்து 

என்று ஆழ்வார் அருளினபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஸ்ரீநிவாசனுக்கு இலக்கணமாக நீள்முடியும், சங்கு சக்கர திவ்யாயுதங்களும், திரு யஜ்ஞயோபவீதமும்  கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை  செய்யும் ஜிவாத்மாவுக்கு பொருந்தும்படியான தாழ்சடை, ஒள்ளிய மழுப்படை, பாம்பு ஆபரணம் போன்ற சிவ-லக்ஷணங்களும் சேர்ந்திருந்தபடியால், சைவர்கள் ஸ்ரீநிவாசனை தங்கள் சிவன் என்று வாதாடினார்கள்.  

அவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாததால், உடையவர் “உங்கள் தேவனுக்கு அடையாளமான திருசூலத்தையும், உடுக்கையும், எங்கள் பெருமானுக்கு அடையாளமான சங்கு சக்கரத்தையும் இத்தெய்வத்திற்கு முன்னே வைப்போம்; எதை ஏற்றுக்கொள்ளுமோ, அத்தெய்வமாக கொள்வோம்” என்று கூறினார். எல்லோரும் சம்மதித்தனர். அதுபோலவே, ஆயுதங்களை எம்பெருமான் திருமுன்பே வைத்துக் கர்பக்ருஹத்தில் யாரும் இல்லாதபடியும் புகமுடியாதபடியும் நன்கு ஆராய்ந்து கதவை பூட்டிவைத்தனர்.

மறுநாள் விடிந்த பிறகு கதவை திறந்து பார்க்கையில், எம்பெருமான் சங்கு சக்கரம் கையில் ஏந்தி சேவை சாதித்தான். இதைக் கண்ட சைவர்கள் தம் ஆரியாமைக்கு வருந்தி ஸ்ரீநிவாசனின் புகழ் பாடினார்கள். எம்பெருமானாரோ ஆனந்தக் கண்ணீர் பெருகி ஸ்ரீநிவாசனை வணங்கி நின்றார்.

“அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்” என்று இராமானுஜர் திருமஞ்சன கட்டியத்தில் நாம் சேவிப்பதின் தாத்பரியமும் இதுவே.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆளவந்தார் அருளிச்செய்த முக்தகம்

ஆளவந்தார் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளின காலத்தில், யாதவப்ரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டிருந்த உடையவர் விரைவில் ஸித்தாந்த ப்ரவர்த்தகர் ஆகவேண்டுமென்று, தேவப் பெருமாளுடைய திருவடிகளில் இந்த ஸ்லோகத்தை அநுஸந்தித்தவாறே ப்ரபத்தி பண்ணினாரென்றும், அப்போதாக அவதரித்த ஸ்லோகம் இது என்று பெரியோர்கள் பணிப்பர்கள்.

தேவப்பெருமாள் விஷயமாக ஆளவந்தார் அருளிச்செய்த "முக்தகம்". காஞ்சி அண்ணங்கராசார்யர் ஸ்வாமி பதிப்பித்த "நித்யாநுஸந்தேய ஸ்தோத்திரமாலை" ஸ்ரீகோசத்திலிருந்து எடுக்கப்பட்டது.

யஸ்ய ப்ரஸாதகலயா பதிர: ச்ருணோதி பங்கு: ப்ரதாவதி ஜவேந ச வக்தி மூக: |
அந்த: ப்ரபச்யதி ஸூதம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி ||

(கருத்து)
பேரருளாளப் பெருமாளுடைய அநுக்ரஹலேசத்தினால் செவிடனும் செவி பெறுவான், முடவனும் விரைந்தோடுவான்; ஊமையும் பேசவல்லவனாவான்; குருடனும் காணப் பெறுவான், மலடியும் மக்கள் பெறுவாள். இப்படிப்பட்ட அநுக்ரஹம் செய்தருளவல்ல பேரருளாளப் பெருமாளை (நான்) தஞ்சம் பற்றுகிறேன்.   

வெள்ளி, 12 ஜூலை, 2013

நம்மாழ்வார் திவ்ய ஸூக்தி அநுபவம் – பகுதி 1

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் ‘வளவேழ் உலகு’ என்று ஒரு பதிகம். இது ‘அம்சிறைய மடநாராய்’ எனும் பதிகத்திற்கு அடுத்து வருவது. 

அம்சிறைய மடநாராயில் ஆழ்வார் தாமான தன்மை இழந்து, கலங்கி, பெண்மை நிலையை அநுகரித்துக் கொண்டு எம்பெருமானிடம் தன் நிலையை உரைக்க பறவைகளை தூது விடுகிறாள்.

அங்ஙனம் தூதுவிடப்பெற்ற எம்பெருமான், ஆழ்வாரின் ஆர்த்தியை (ஏக்கத்தை) பார்த்து, அவரை வாழ்விக்க திருவுள்ளம் கொண்டு, ஆழ்வாரிடம் எழுந்தருளினான். 

எம்பெருமானையும் தம்மையும் பார்த்தார் ஆழ்வார். “பூ, நீளா தேவிமார்கள், திருவடி, திருவனந்தாழ்வான், முக்தாத்மாக்கள் அநுபவிக்கும் எம்பெருமான் எங்கே? நாம் எங்கே? நாமோ நீசன், நிறை ஒன்றுமில்லாதவன். எனவே, நாம் எம்பெருமானை கிட்டி வாழ்வதைக் காட்டிலும் விலகுவதே சரி” என்று நைச்யானுசந்தானம் பண்ணி (அயோக்யதையை அனுசந்தித்து) ஆழ்வார் விலகப் பார்க்கிறார். இவ்வாறு விலகும் இயல்பைப்பற்றி ‘வளவேழ் உலகில் ஆழ்வார்’ என்று நம் சம்பிரதாயத்து பெரியோர்கள் சொல்வதுண்டு.

ஒரு சமயம் ஆழ்வார், தம் நெஞ்சாலும், வாக்காலும் எம்பெருமானை நினைத்தும், சொல்லியும் அனுபவித்தால், அந்த நெஞ்சும், வாக்கும் குற்றமுடையதாக இருப்பதினால், எம்பெருமானுக்கு குற்றம் உண்டாகுமோ என்று அஞ்சினார். இவ்வாறு எம்பெருமானை பற்றி நினைக்கும் நெஞ்சுக்கும் சொல்லும் வாக்கிற்கும் தாம் குடிகொண்ட புளியமரத்தடி தான் காரணம் என்று கருதி “இனி எம்பெருமானை எண்ணலாகாது, சொல்லலாகாது’ என்று அந்த இடத்தை விட்டு அருகில் இருக்கும் ஒரு குட்டி சுவற்றில் எழுந்தருளினார்.

அப்பொழுது, மூட்டை தூக்கி ஜீவிக்கும் ஒருவன் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டுவர, அந்த மூட்டை மிகவும் கனத்திருந்ததால் சுமைதாங்கி போலிருக்கும் அந்த குட்டிசுவற்றின் மேல் அந்த மூட்டையை இறக்கி வைத்து, திருமகள் கேள்வனனான எம்பெருமானை நினைத்து “செல்வ நாராயணா” என்று அழைத்தான்.

அந்த சொல் நம் ஆழ்வாரின் செவியல் பட, அவ்வளவு தான். அவர் திருக்கண்களிலிருந்து நீர் பெருகி “எங்கே என் செல்வநாராயணன்?” என்று தேடும்படியான நிலைமை உண்டாயிற்று. எம்பெருமானை நெஞ்சினால் எண்ணலாகாது, வாக்கினால் சொல்லலாகாது என்றிருந்த ஆழ்வார் இப்பொழுது எம்பெருமானை தேடி அலைய ஆரம்பித்துவிட்டார்.

செல்வநாரணனென்ற சொற்கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே 

(தொடரும்)

Ref: "நம்மாழ்வாரும் வைஷ்ணவமும் - காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமி"